Published:Updated:

`விசாரித்தேன்; கன்னத்தில் அறைந்தார்' - நடிகையின் சகோதரரால் காவலருக்கு நேர்ந்த சோகம்!

சாலிகிராமத்தில் போதையிலிருந்த இளைஞர் ஒருவர், காவலரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ரோந்து வாகனம்
காவல் ரோந்து வாகனம்

சென்னைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 11.45 மணியளவில் போனில் பேசிய நபர், `சாலிகிராமம், தசரதபுரம், 8-வது தெருவில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டு வருகிறார். உடனே வாருங்கள்' என்று கூறினார். இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் இரவு ரோந்து போலீஸாருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பழனி, காவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீஸ்
போலீஸ்

அப்போது குடிபோதையில் இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அவரிடம் காவலர் சங்கர் விசாரித்தார். காவலரை அந்த இளைஞர், தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் காவலர் சங்கர் மற்றும் போலீஸார் ஈடுபட்டனர். இந்தச் சமயத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், காவலர் சங்கரின் வலது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் காவலர் சங்கர் நிலைகுலைந்தார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பழனி, காவலர் சங்கர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு அந்த இளைஞரை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். போதையில் அந்த இளைஞர் இருந்ததால் அவரிடம் போலீஸார் விசாரிக்கவில்லை. போதை தெளிந்தபிறகு அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்தனர்.

``நாளைக்கு என் கணவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இந்த ரெண்டு பேர்தான் பொறுப்பு!'' - நடிகை வினோதினி

விசாரணையில் அவரின் பெயர் விக்கி என்கிற விக்னேஷ்குமார், புஷ்பா காலனி, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர் பிரபல நடிகை ஒருவரின் சகோதரர் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். நடிகையின் சகோதரர் விக்கியிடம் அடிவாங்கிய காவலர் சங்கர், 2009-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தவர். இவர் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். காவலர் சங்கர் புகார் கொடுத்தால் நடிகையின் சகோதரர் விக்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் காவலர் சங்கர், தன்னுடைய உயரதிகாரிகளிடம் குடிபோதையில் நடுரோட்டில் தகராறு செய்த விக்கியிடம் விசாரித்தேன். ஆனால், அவர் என் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.