Published:Updated:

`என்னைத் தவிர எந்தப் பெண்ணுடனும் பேசக்கூடாது!' - சென்னைக் காவலரைப் பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்

சென்னையில் போதையில் தூங்கிக்கொண்டிருந்த போலீஸ்காரரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த இளம்பெண், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆஷா
ஆஷா

சென்னை திருமுல்லைவாயல், சத்யமூர்த்திநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவருக்கும் ஜெயா என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. வெங்கடேசன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 2-ம் அணியில் காவலராகப் பணியாற்றிவந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். காவலர் வெங்கடேசன், மகளுடன் தனியாக வசித்துவந்தார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இந்த நிலையில், புளியந்தோப்பைச் சேர்ந்த திருமணமான ஆஷா என்ற பெண்ணுடன் வெங்கடேசனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு கணவன், குழந்தைகளைப் பிரிந்து வெங்கடேசனுடன் ஆஷா குடியிருந்துவந்தார். ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில் பிரச்னை வரத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் வெங்கடேசனுக்கும் ஆஷாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, வெங்கடேசன், `உன்னால் என் வாழ்க்கையில் நிம்மதியில்லை, நீ இப்படியே நடந்துகொண்டால், உன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்.

ஆஷா
ஆஷா

இல்லையெனில் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டியுள்ளார். அதற்கு ஆஷா, `உன்னை நம்பித்தானே 2 குழந்தைகளை விட்டுவிட்டு உன்னுடன் வந்தேன்' என்று கூறியுள்ளார். இருவருக்கும் நடந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அதன்பிறகு போதையிலிருந்த வெங்கடேசன், தூங்கச் சென்றார்.

தகராறு காரணமாக ஆஷா தூங்கவில்லை. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மீது பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்திருக்கிறார். இதனால் தீ மளமளவென வெங்கடேசனின் உடலில் பிடித்துள்ளது. இதனால் அவர் அலறித் துடித்துள்ளார். அதைப்பார்த்து மனம்மாறிய ஆஷா, தீயை அணைத்துள்ளார். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

ஆனால், 80 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து உதவி கமிஷனர் ஜான்சுந்தர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் விசாரணை நடத்தினார். முதலில் காவலர் வெங்கடேசன், குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக ஆஷா கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து நடந்த விசாரணையில் வெங்கடேசனைக் கொலை செய்ததை ஆஷா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வெங்கடேசனின் சொந்த ஊர் விழுப்புரம், பொய்யப்பாக்கம் கிராமம். தமிழகக் காவல் துறையில் காவலராக 2016-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர், ஜெயா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். முதல் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசந்தது. இதனால் மகளுடன் வெங்கடேசன் தனியாக வசித்து வந்தார். இதன்பின்னர், புளியந்தோப்பைச் சேர்ந்த திருமணமான ஆஷா என்ற பெண்மணியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் கடந்த 7 மாதங்களாக வெங்கடேசன் வாழ்ந்துவந்திருக்கிறார். வெங்கடேசனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆஷா, அவரின் செல்போனை எடுத்து அவர் யாருடன் பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்து வந்திருக்கிறார்.

 கொலை வழக்கில் சிக்கிய ஆஷா
கொலை வழக்கில் சிக்கிய ஆஷா

மேலும் வெங்கடேசனிடம், `நீ என்னைத் தவிர எந்தப் பெண்ணுடன் பேசக் கூடாது' எனக் கூறிவந்துள்ளார். சில நாள்களாக வெங்கடேசனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதனால் கடந்த 15 நாள்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மீது தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்" என்றனர்.