Published:Updated:

`சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஆடியோ விவகாரம்!’ - எஃப்.ஐ.ஆரை ரத்து செய்த நீதிமன்றம்

ஆடியோ
ஆடியோ ( மாதிரிப் படம் )

சென்னை உதவி இன்ஜினீயர், கல்லூரி மாணவி ஆடியோ விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் கமலகண்ணன், கொரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலராகப் பணியாற்றிய கல்லூரி மாணவியிடம் போனில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதுதொடர்பாக எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீஸார், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் பேசினர். அவர் அளித்த தகவலின்படி கமலகண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கமலகண்ணை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

உதவி இன்ஜினீயர் கமலகண்ணனை போலீஸார் தேடிவருவதாகக் கூறிய நிலையில் கல்லூரி மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கொடுத்த மனுவில், ``உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் ஒருபோதும் தவறான எண்ணத்தில் என்னிடம் பழகியதும் இல்லை. நானும் இன்ஜினீயரும் பேசிய செல்போன் உரையாடல்களை எனது அனுமதியின்றி எனக்குத் தெரியாமல் யாரோ என் செல்போனிலிருந்து திருடி அதைப் பார்வேர்டு செய்து அதை எடிட்டிங் செய்து சித்திரித்து சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டுவிட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, கல்லூரி மாணவியிடம், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இந்தநிலையில் மாணவி ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ``அந்த ஆடியோ வரும் தகவல்கள் உண்மையில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் மாதிரி பழகிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னையை இதற்கு மேல் பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

சென்னை 
 மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இந்தச் சூழலில் உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் தன் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் தரப்பில் வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் ஆஜராகினர்.

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவி, உதவி இன்ஜினீயர் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நீதிபதி இளந்திரையனிடம் வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், உதவி இன்ஜினீயர் மீதான புகாரின் முகாந்திரம் இல்லை. அதனால் எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. அதனால் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

சென்னை: `அந்த ஆடியோ உண்மை கிடையாது’ - உதவி இன்ஜினீயர் விவகாரத்தில்  கல்லூரி மாணவி
வாட்ஸ் அப் ஆடியோ
வாட்ஸ் அப் ஆடியோ

இந்தச் சமயத்தில் நீதிபதி இளந்திரையன், கல்லூரி மாணவியின் கருத்தைக் கேட்டார். அதற்கு மாணவி, இந்த வழக்கில் நான் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. அதனால் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி இளந்திரையன் உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் கமலகண்ணன் கொரோனா நிவாரண நிதிக்கு 10,000 ரூபாயை செலுத்தும்படி தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் கூறுகையில், ``உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் முகாந்திரமும் இல்லை. மேலும், அந்த ஆடியோவில் பேசும் மாணவியும் நடவடிக்கை வேண்டாம் என்று கூறிவிட்டார். தனிப்பட்ட இருவர் பேசிக்கொள்ளும் ஆடியோ பெண்களுக்கு எதிரான குற்றமாகக் கருத முடியாது. அதனால் எஃப்.ஐஆரை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

இதுகுறித்து உதவி இன்ஜினீயர் கமலகண்ணனிடம் கேட்டதற்கு, ``என் மீது சுமத்தப்பட்ட புகாரில் உண்மையில்லை என்பதை நிரூபிக்க சிறிது காலம் தேவைப்பட்டது. இந்த ஆடியோ எனக்கு எதிராகத் திசைதிருப்ப சிலர் முயற்சி செய்தார்கள். புகாரே கொடுக்காமல் அவசர அவசரமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ரத்து செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது" என்றார்.

வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார்
வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர்கள் கூறுகையில், ``கொரோனா காலகட்டத்தில் எங்களின் உயிரைப் பணயம் வைத்து பணி செய்துகொண்டிருக்கிறோம். அதில் ஆயிரத்தெட்டு அரசியல் பிரச்னைகள் இருந்தபோதிலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்து கொரோனா பாதிப்பை இன்று சென்னையில் குறைத்துள்ளோம். ஆனால், கமலகண்ணன் ஆடியோ வெளியானதும் அவரை அவசரப்பட்டு பணியிடை நீக்கம் செய்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட கமலகண்ணனிடம் விளக்கம் கேட்டபிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைப் போல போலீஸாரும் இந்தச் சம்பவத்தில் அவசரப்பட்டுவிட்டார்கள். இதற்குப் பின்னணியில் சிலரின் சதி செயல் உள்ளது" என்றனர்.

இதற்கிடையில் உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு