
சென்னையில் நண்பர்களுடன் மது அருந்திய மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கில் மாநகராட்சி ஊழியரின் நண்பர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் பாபு (22). இவர் சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கும் ஊழியராகப் பணியாற்றிவந்தார். கடந்த ஜனவரி மாதம், 26-ம் தேதி பாபுவும் அவரின் நண்பர்களும் ஐஸ்ஹவுஸ் லாயிட்ஸ் காலனி பகுதியிலுள்ள வீட்டில் மது அருந்தினர்.
போதை தலைக்கேறியதும் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து சண்டை போட்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் வீட்டில் கேனில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கீழே கொட்டியது. அதை அவர்கள் கவனிக்கவில்லை. அதன் பிறகு பாபுவின் நண்பர்கள் சிகரெட் புகைத்தனர். அதன் நெருப்பு பெட்ரோலில் விழ, வீடு தீப்பிடித்தது. அதில் பாபு சிக்கிக்கொண்டார். மற்றவர்கள் தப்பிச் சென்றனர்.
போதையிலிருந்த பாபுவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையிலிருந்த பாபு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வழக்கு பதிவு செய்து பாபுவின் நண்பர்களிடம் விசாரித்தார்.

பாபுவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அவரின் நண்பர்கள் சுப்பிரமணி, சார்லஸ் மற்றும் விக்னேஷ்குமார் ஆகியோரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கில் பாபுவின் நண்பர்கள் இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.