Published:Updated:

சென்னை: 'மாநகராட்சி ஊழியர் கொலை'- இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!

கொலை
கொலை ( Representational image )

சென்னையில் அண்ணன் கொலைக்குப் பழி வாங்க ரௌடி ஒருவரின் மாமனாரான மாநகராட்சி ஊழியர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யூ, 82- வது குறுக்குத் தெருவில் வசித்துவந்தவர் வேலு (41). இவர், மாநகராட்சியில் கொரோனா மருந்து தெளிக்கும் பணியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவந்தார். கடந்த 4.7.2021-ம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்த வேலுவை ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வேலுவின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது. இதையடுத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு வேலுவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை வழக்கில் கைதான சஞ்சய்
கொலை வழக்கில் கைதான சஞ்சய்

பின்னர் துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையில் உதவி ஆய்வாளர் ஐயப்பன், தலைமைக் காவலர்கள் புஷ்பராஜ், திருமுருகன், தாமோதரன், முதல்நிலைக் காவலர்கள் சிங்காரவேலன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வேலுவைக் கொலை செய்த கும்பலைத் தேடிவந்தனர். சிசிடிவி மூலம் கொலையாளிகளை அடையாளம்கண்ட போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது வேலு கொலை பழிக்குப்பழியாக நடந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வேலுவின் மருமகன் ரௌடி சுரேஷ். இவரின் நண்பன் ஸ்டீபன். இவர்களின் கூட்டாளியாக சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம், துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்த வடிவழகன் என்கிற கருப்பு வடிவேல் (28) இருந்தார். ரௌடியான வடிவழகன் மீது சென்னை பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கருப்பு வடிவழகன், அவரின் சகோதரர்கள் 'கடுகு' என்கிற ஹரிசங்கர், 'சேட்டு' என்கிற பாலாஜி ஆகியோர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

சார்லஸ்
சார்லஸ்

இந்தநிலையில், சிறையிலிருந்த கருப்பு வடிவழகன், இனிமேல் தான் திருந்தி வாழப்போவதாக தன்னுடைய கூட்டாளிகளான ஸ்டீபன், சுரேஷிடம் கூறியிருக்கிறான். அதனால் வடிவழகனைக் கொலை செய்ய சுரேஷ், சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்டீபன், வினோத்குமார் என்கிற காராமணி. பெரம்பூரைச் சேர்ந்த சாய், மேத்தா நகரைச் சேர்ந்த அப்பு, சூளைமேட்டைச் சேர்ந்த நிர்மல், சந்துரு ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 15.6.2021-ம் தேதி இரவு 9.45 வடிவழகன் தங்கியிருந்த பகுதிக்குச் சென்ற ஸ்டீபன் தரப்பு தெருவுக்குச் சென்று "திருடன்! திருடன்!" என்று சத்தம்போட்டனர். அதைக் கேட்டு வெளியில் வந்த வடிவழகனை ஓட ஓட விரட்டி செனாய் நகர் முத்தியப்பன் தெருவில் சுற்றி வளைத்துக் கொலை செய்தது.

கருப்பு வடிவழகனைக் கொலை செய்த வழக்கில் ஸ்டீபனும் அவனின் கூட்டாளிகளும் சிறையில் உள்ளனர். வேலுவின் மருமகனான ரௌடி சுரேஷும் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தகவல் தெரியாமல் தன்னுடைய அண்ணனைக் கொலை செய்யக் காரணமாக இருந்த சுரேஷைக் கொலை செய்ய கருப்பு வடிவழகனின் தம்பி சேட்டு என்கிற பாலாஜி திட்டமிட்டான். இதையடுத்து தன்னுடைய கூட்டாளிகளான சஞ்சய், சார்லஸ், தினேஷ் மற்றும் இரண்டு சிறார்களை அழைத்துக்கொண்டு பைக்கில் சுரேஷின் வீட்டுக்கு பாலாஜி சென்றான்.

செங்கல்பட்டு: ஆபாச இணையதளங்களுக்கு அடிமை! - சிறுமி கொடூரக் கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்
தினேஷ்
தினேஷ்

அங்கு சுரேஷ் இல்லை. சுரேஷின் மாமனார் வேலு, மதுபோதையில் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த பாலாஜி டீம் அங்கிருந்து தப்பிச் சென்றது. செல்போன் சிக்னல், சிசிடிவி மூலம் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேரைக் கைதுசெய்தோம். சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்திருக்கிறோம். மற்ற நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர். அண்ணனைக் கொலை செய்தவர்களைப் பழிக்குப் பழிவாங்க சென்ற இடத்தில் ரௌடி சுரேஷின் மாமனாரான மாநகராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு