Published:Updated:

`கண்டித்தேன்; ஆனாலும் மனம்மாறவில்லை!' - சைதாப்பேட்டை கொலையில் சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

ஜெயாவின் கணவர் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்த அவரது வாழ்க்கையில் சில மாற்றங்கள் தெரிந்தன. சகோதரி என்ற முறையில் அவரைக் கண்டித்தேன். ஆனால், ஜெயா மனம் மாறவில்லை.

கொலையான ஜெயா
கொலையான ஜெயா

சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயா. இவர், சென்னை மாநகராட்சியில் சாலைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். ஜெயாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரின் மகன், திருக்கழுகுன்றத்தில் உள்ள ஜெயாவின் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த ஜெயாவின் வீட்டுக்கு அவரின் சகோதரியான தேவி, கடந்த சில தினங்களுக்கு முன் வந்திருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த 12-ம் தேதி அதிகாலை ஜெயா இறந்துவிட்டதாகக் கூறி தேவி கதறி அழுதிருக்கிறார். மேலும், உதவிக்காக சிலரை அவர் வரவழைத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஜெயாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, திடீரென நெஞ்சு வலி காரணமாக ஜெயா இறந்துவிட்டதாகத் தேவி கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார்.

தேவி
தேவி

இதையடுத்து, ஜெயாவின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சமயத்தில் ஜெயாவின் உறவினர் ராஜா என்பவர், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்திவிட்டுப் பிரேத பரிசோதனைக்காக ஜெயாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், கழுத்து நெரித்து ஜெயா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இததையடுத்து, ஜெயாவின் சகோதரி தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், உடல் நலம் சரியில்லாமல்தான் ஜெயா இறந்ததாகக் கூறினார். இதை நம்ப மறுத்த போலீஸார் ஜெயா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஜெயாவின் வீட்டுக்குள் இரண்டு பேர் செல்கின்றனர். அதன் பின் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் முகத்தை மறைத்தபடி வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் சென்ற பிறகுதான் தேவி, கதறி அழுதபடி வெளியில் வரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

இதனால் தேவி மீது போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. மீண்டும் தேவியிடம் விசாரணை நடத்தினர். போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத தேவி, ஜெயாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேவி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த சிற்பக்கலைஞர் எத்திராஜ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸாரிடம் தேவி அளித்த வாக்குமூலத்தில் ஜெயாவை கொலை செய்ததற்கான காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சைதாப்பேட்டை போலீஸார், ``ஜெயா கொலையில் துப்பு துலங்குவதற்கு சிசிடிவி கேமராதான் பெரும் உதவியாக இருந்தது. கேமராவை ஆய்வு செய்தபோது ஜெயாவின் வீட்டிலிருந்து வெளியேறிய 2 பேர் குறித்த விவரங்கள் எங்களுக்குத் தெரிந்தது. மாநகராட்சியில் ஜெயா வேலை பார்த்து வந்ததால் அவர் இறந்த பிறகு, கிடைக்கும் நிவாரணத்துக்காகவும் குடும்ப சொத்துகளுக்காகவும் இந்தக் கொலை நடந்ததைக் கண்டறிந்தோம். ஜெயாவை கொலை செய்வதற்காகவே தேவி, சைதாப்பேட்டை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். நள்ளிரவில் தேவி கொடுத்த தகவலின்பேரில்தான் எத்திராஜ், அவரின் நண்பர் ஒருவர் என இருவர் ஜெயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ஜெயா அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, தேவி, எத்திராஜ் மற்றும் அவரின் நண்பர் என மூன்று பேரும் சேர்ந்து ஜெயாவின் கை, கால்களைப் பிடித்துக் கொண்டனர். அதன் பிறகு கழுத்தை நெரித்துள்ளனர். இதனால் ஜெயா உயிருக்குப் போராடியுள்ளார். அவர் சத்தம் போடாமலிருக்க தலையனையால் முகத்தை அழுத்தியுள்ளனர். மூச்சுத்திணறி ஜெயா இறந்ததும் தேவியைத் தவிர இருவரும் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளனர். அதன் பிறகு, எந்தவித பதற்றமும் இல்லாமல் உறவினர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் நம்ப வைக்க உடல் நலம் சரியில்லாமல் ஜெயா இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார் தேவி. ஆனால், அவர் ஓவராக நடித்ததால் சிக்கிக்கொண்டார். ஜெயாவை கொலை செய்த குற்றத்துக்காக தேவி, எத்திராஜ் ஆகியோரை கைது செய்துள்ளோம். எத்திராஜின் நண்பரைத் தேடி வருகிறோம்" என்கின்றனர் விரிவாக.

தேவி அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய அப்பா, மாநகராட்சியில் பணியாற்றினார். அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் ஜெயாவுக்கு அந்த வேலை கிடைத்தது. இதனால் சைதாப்பேட்டையில் ஜெயா குடியிருந்து வந்தார். என் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். என் தங்கைதான் ஜெயா. எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். இதனால் குடும்ப சொத்துகளைப் பிரிப்பதில் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் ஜெயாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ஜெயாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அதை நான் கண்டித்தேன். ஆனால் ஜெயா, தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு முன்பே ஜெயாவுடன் பழகிய ஒருவரைத் தற்போது திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்திருந்தார். ஜெயா, திருமணம் செய்துவிட்டால் குடும்ப சொத்துகளைப் பிரிப்பதில் மேலும் சிக்கல்கள் வரும். ஜெயாவின் ஆசையும் நிறைவேறக் கூடாது என்று கருதினேன்.

ஜெயா கொலை துப்பு துலங்க சிசிடிவி கேமராதான் உதவியாக இருந்தது. கேமராவை ஆய்வு செய்தபோது ஜெயா வீட்டிலிருந்து வெளியேறிய 2 பேர் குறித்த விவரங்கள் எங்களுக்குத் தெரிய வந்தது.
விசாரணை அதிகாரி

இதனால்தான் ஜெயாவை கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்காக எனக்குத் தெரிந்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த எத்திராஜ் மற்றும் அவரின் நண்பர் ஒருவரிடம் தகவலைத் தெரிவித்தேன். எங்கள் திட்டப்படி எத்திராஜ் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் சம்பவத்தன்று ஜெயாவின் வீட்டுக்கு வந்தனர். மூன்று பேரும் சேர்ந்து ஜெயாவைக் கொலை செய்தோம். உயிருக்குப் போராடிய ஜெயா, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். அவரை உயிரோடு விட்டுவிட்டால் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று கருதி அவரின் கழுத்தை நெரித்தும் தலையனையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்தோம்" எனக் கூறியிருப்பதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.