Published:Updated:

சென்னை: பெண்ணைக் கொன்று தீயிட்டு எரித்த கொடூரம்! 5 சவரன் செயினால் நடந்த விபரீதம்!

Murder
Murder

சென்னை நொளம்பூர் பகுதியில் குப்பையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொலைசெய்த வழக்கில் மாநகராட்சியின் துப்பரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள காலி மைதானத்தில் நேற்று மாலை திடீரென குப்பை, தீ பிடித்து எரிந்தது. அப்போது நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு சென்று பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார் எரிந்த நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திம்மப்பாவின் பைக்
திம்மப்பாவின் பைக்

இளம்பெண்ணின் சடலம் அருகே ஹேண்ட் பேக் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தபோது அதற்குள் ரேவதி என்ற பெயரில் ஆதார் கார்டு, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளருக்கான அடையாள அட்டையும் இருந்தது. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அப்போது சென்னை வானகரம், சக்தி சாய் ராம் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்பவர், தன்னுடைய மனைவி ரேவதியைக் (35) காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், முருகனிடம் விசாரித்தனர். பிறகு இளம்பெண்ணின் சடலம், ஹேண்ட் பேக்கை போலீஸார் முருகனிடம் காண்பித்தபோது அது, தன்னுடைய மனைவி ரேவதி என்று உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் ரேவதி, தூய்மை பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவருடன் தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி ஜில்லா, பட்டான்சேரு கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பா (24) என்பவர் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ரேவதிக்கும் திம்மப்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கடந்த 16.6.2021-ம் தேதி ரேவதி, தன்னுடைய 5 சவரன் தங்கச் செயினை திம்மப்பாவிடம் கொடுத்திருக்கிறார். அதை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள அடகு கடையில் 35,000 ரூபாய்க்கு திம்மப்பா அடகு வைத்திருக்கிறார்.

 கொலை
கொலை

அடகு வைத்த பணத்தில் 20,000 ரூபாயை ரேவதியும் 15000 ரூபாயை திம்மப்பாவும் பங்கு பிரித்திருக்கின்றனர். அதன்பிறகு 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை வரை ரேவதி வேலைக்குச் செல்லவில்லை. 21-ம் தேதி ரேவதி வேலைக்குச் சென்றபோது அவரின் கணவரிடமிருந்து கடிதம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் சூப்பர்வைஸர் கமலக்கண்ணன். அதனால் வீட்டுக்கு வந்த ரேவதி, அன்றைய தினம் மாலை ஆலம்பாக்கத்துக்குச் செல்வதாகக் குழந்தைகளிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே திம்மப்பாவை ரேவதி சந்தித்து பேசியிருக்கிறார். அதன்பிறகு திம்மப்பாவின் பைக்கில் ரேவதி சென்றிருக்கிறார்.

நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள காலி இடத்துக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். அப்போது திம்மப்பாவிடம், தன்னுடைய 5 சவரன் தங்கச் செயினை திரும்ப ரேவதி கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த திம்மப்பா, ரேவதியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அப்போது ரேவதி சத்தம் போட்டதால் அருகில் கிடந்த பேப்பர்களை அவரின் வாயில்வைத்து அமுக்கியிருக்கிறார் திம்மப்பா. பின்னர் ரேவதியின் துப்பட்டாவால் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து முட்புதரில் தள்ளிவ தீ வைத்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றிருக்கிறார்.

கைதான திம்மப்பா
கைதான திம்மப்பா
சென்னை: திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன் கொலை! - விசாரணையில் மனைவியின் ஆண் நண்பர்!

இதையடுத்து ரேவதியைக் கொலை செய்த குற்றத்துக்காக திம்மப்பாவை கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர் புகாரளித்திருக்கிறார் இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். நகைக்காக நடந்த தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு