Published:Updated:

சென்னை: `ஐ.டி கம்பெனி வேலை டு ஆடு திருட்டு!’ - மனைவியுடன் சிக்கிய கணவர்

சிசிடிவியில் சிக்கிய கார்த்திக், காவேரி
சிசிடிவியில் சிக்கிய கார்த்திக், காவேரி

ஊரடங்கால் ஐ.டி கம்பெனி, உணவு டெலிவரி வேலை பறிபோனதால் கர்ப்பிணி மனைவி கொடுத்த ஐடியாவால் கணவனும் மனைவியும் சேர்ந்து ஆடுகளைத் திருடி வந்துள்ளனர்.

சென்னை எண்ணூர் முகத்துவாரக்குப்பம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி (30). இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``எனக்கு சொந்தமாக 6 வெள்ளாடுகள் உள்ளன. எனது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். அடிக்கடி எங்கள் பகுதியில் வெள்ளாடுகள் காணமால் போனது. 2.8.2020-ம் தேதி இரவு என் ஆடுகளை வீட்டின் உள்ளே கட்டி வைத்து தூங்கச் சென்றுவிட்டேன். இரவு 11.30 மணியளவில் ஆடுகள் சத்தம் கேட்டது.

போலீஸ் பிடியில் கார்த்திக்
போலீஸ் பிடியில் கார்த்திக்

அதைக்கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது ஆணும் பெண்ணும் 10 கிலோ எடையுள்ள கறுப்பு நிற வெள்ளாடு ஒன்றை டிஎன்03 எஸ் 6418 என்ற பைக்கில் முன்பக்கமாக ஏற்றியிருந்தனர். அந்தப் பெண் பைக்கின் பின்னால் ஏறி உட்கார முயன்றார். அதைப் பார்த்த நான் சத்தம் போட்டேன். அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவர்களைப் பிடித்துவிட்டேன். 3.8.2020-ல் காலை 7 மணியளவில் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 379-ன் கீழ் வழக்கு பதிந்து இருவரிடமும் விசாரித்தார்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆடு திருட்டில் ஈடுபட்டது கணவன் மனைவி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து எண்ணூர் போலீஸார் கூறுகையில், ``தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி எண்ணூரைச் சேர்ந்த காவேரி (25). இவர் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

காவேரி, கார்த்திக்
காவேரி, கார்த்திக்

இவர்கள் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதனால் குடும்பத்தினர் உதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். காவேரி கர்ப்பமாக உள்ளார். ஊரடங்கு காரணமாக இருவருக்கும் வேலை பறிபோனது. அதனால் கார்த்திக், காவேரி ஆகியோர் வறுமையில் வாடினர். அப்போது காவேரி, எண்ணூர் பகுதியில் ஆடுகள் அதிகளவில் தெருவில் சுற்றித் திரியும். அதைத் திருடி விற்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

அதை ஏற்றுக்கொண்ட கார்த்திக், மனைவியை அழைத்துக் கொண்டு எண்ணூருக்குச் சென்றார். அங்கு தெருவில் ஆடுகள் சுற்றித்திரிந்தன. அதைத் திருடிய கார்த்திக்கும் காவேரியும் குறைந்தவிலைக்கு ஆட்டை விற்றனர். அதனால் இருவருக்கும் பணம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து எண்ணூர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இருவரும் ஆடுகளைத் திருடிவந்தனர்.

`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!' - இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி?
ஆடு திருட்டு வழக்கில் சிக்கிய கார்த்திக், காவேரி
ஆடு திருட்டு வழக்கில் சிக்கிய கார்த்திக், காவேரி

போலீஸார், பொதுமக்கள் சந்தேகப்படாமலிருக்க கர்ப்பிணி மனைவி காவேரியையும் கார்த்திக் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்று இந்த ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளார். இதுவரை இந்தத் தம்பதி 20 ஆடுகளைத் திருடி தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் விற்று வந்துள்ளனர். ஆடு திருடிய குற்றத்துக்காக கார்த்திக், காவேரியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

கார்த்திக், காவேரி ஆடு திருடும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ஹெல்மெட் அணிந்திருக்கும் கார்த்திக், தெருவில் படுத்திருக்கும் ஆடு ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து பைக்கின் முன் பகுதியில் வைக்கிறார். பின்னர் இன்னொரு ஆட்டை அவர் தூக்கிக்கொண்டு வருகிறார். அதுவரை பைக்கிலிருக்கும் ஆட்டை காவேரி பிடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு ஆடுகளை ஒரே நேரத்தில் திருடிக்கொண்டு பைக்கை கார்த்திக் ஸ்டார்ட் செய்வதற்குள் ஒரு ஆடு பைக்கிலிருந்து குதித்து தப்பி ஓடுவதோடு சிசிடிவி முடிவடைகிறது.

அடுத்த கட்டுரைக்கு