Published:Updated:

`பால் குடித்த பிறகு கண்விழிக்காத குழந்தை!'- 8 மணிநேர விமானப் பயணம்; அதிர்ச்சியில் உறைந்த ஐ.டி தம்பதி

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த இன்ஜினீயர் தம்பதியின் கையிலிருந்த 6 மாதக் குழந்தை விமானத்திலேயே இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னையை அடுத்த சேலையூர், வேங்கைவாசல், வேலவன் காலனியைச் சேர்ந்தவர் சக்தி முருகன் (32). இவரின் மனைவி கீதா (29). இன்ஜினீயர்களான இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இந்தத் தம்பதிக்கு 6 மாதக் கைக்குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ஹர்த்திக் எனப் பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தனர்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வர சக்திமுருகன் முடிவுசெய்தார். அதற்காக டிக்கெட்களை முன்பதிவு செய்தனர். சக்தி முருகன், கீதா, ஹர்த்திக் மற்றும் கீதாவின் அம்மா பிரிட்டோ குயின் ஆகியோர் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு வருவதற்காக விமானத்தில் ஏறினர். கோலாலம்பூர் வழியாக நேற்றிரவு 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான பயணத்தின்போது ஹர்த்திக் தூங்கியுள்ளான். இதனால் பயணக் களைப்பில் அவன் நீண்ட நேரம் தூங்குவதாக பெற்றோர் கருதினர். சென்னை விமான நிலையத்துக்கு வந்தபிறகும் ஹர்த்திக் கண்விழிக்கவில்லை. விமான நிலைய சோதனைகளை முடித்த இந்தத் தம்பதிக்கு, `ஹர்த்திக் ஏன் கண்விழிக்கவில்லை?' என்ற கவலை ஏற்பட்டது. இதையடுத்து, விமானநிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள், ஹர்த்திக்கை பரிசோதித்தனர். அப்போது குழந்தை இறந்தது தெரியவந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்தத் தகவல் சக்திமுருகனுக்கும் கீதாவுக்கும் தெரிவிக்கப்பட்டதும் விமான நிலையத்திலேயே அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, ஹர்த்திக் இறப்பு குறித்து விமான நிலைய காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விமான நிலைய போலீஸார் ஹர்த்திக்கின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சக்திமுருகன், கீதா, பிரிட்டோ குயின் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களின் முதற்கட்ட விசாரணையில் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு சக்திமுருகன் குடும்பத்தோடு சந்தோஷமாக வந்துள்ளனர். விமானத்தில் ஏறும்போது ஹர்த்திக் துரு, துருவென இருந்துள்ளான். அதன்பிறகு கீதா, விமானத்திலேயே அவனுக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் ஹர்த்திக் கீதாவின் மடியிலேயே படுத்துறங்கியுள்ளான். சுமார் 8 மணி நேர பயணம் என்பதால் சோர்வில் ஹர்த்திக் தூங்குவதாக கீதாவும் சக்திமுருகனும் கருதியுள்ளனர். விமானத்திலிருந்து இறங்கியபிறகும் ஹர்த்திக் கண்விழிக்கவில்லை என்றதும் சக்திமுருகனுக்கும் கீதாவுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

`குழந்தை இறந்து 2 மணி நேரம் ஆகுது!’- சென்னைப் பெண்மணிக்கு  விமானத்தில் நேர்ந்த சோகம்

ஹர்த்திக்கின் உடலும் குளிர்ந்துள்ளது. அதன்பிறகே விமான நிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஹர்த்திக்கின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகிறோம். `பால் குடித்தபிறகு ஹர்த்திக் கண்விழிக்கவில்லை' என்று அவரின் பெற்றோர் விசாரணையின்போது தெரிவித்தனர். இதனால் ஹர்த்திக், மூச்சுத் திணறி இறந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் ஹர்த்திக்கின் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றனர்.

சந்தோஷமாக சொந்த ஊருக்கு வந்த இன்ஜினீயர் தம்பதிக்கு விமான நிலைய பயணத்தின்போது மகன் இறந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.