Published:Updated:

சென்னை: முன்விரோதம்; கத்திக்குத்து! - கொலை முயற்சி வழக்கில் அண்ணன், தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை

10 ஆண்டுகள் சிறை
10 ஆண்டுகள் சிறை

சென்னை அபிராமபுரத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர்களைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அண்ணன், தம்பி ஆகிய இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (26). இவர் தன்னுடைய நண்பர் சுந்தர் என்பவருடன் சேர்ந்து பைக்கில் கடந்த 9.6.2014-ம் தேதி அபிராமபுரம் அன்னை சத்யா நகர் 2-வது தெரு சந்திப்பில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த சதீஷ், பிரகாஷ், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் நரசிம்மனின் பைக்கை வழிமறித்தனர். பின்னர் தகராறில் ஈடுபட்ட அவர்கள் நரசிம்மன், சுந்தர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தனர்.

கைது
கைது

இது குறித்து நரசிம்மனின் தந்தை கண்ணன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சதீஷ், பிரகாஷ், சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் கைதான மூன்று பேரும் சகோதரர்கள் என்று தெரிந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் 14.7.2021-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த சதீஷ், பிரகாஷ் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பாகப் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுத்த அபிராமபுரம் காவல் நிலைய போலீஸாரை சென்னை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

புதுக்கோட்டை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
அடுத்த கட்டுரைக்கு