Published:Updated:

சென்னை: 48 நாள்களில் 1,193 திருட்டு செல்போன்கள் மீட்பு!

மீட்கப்பட்ட செல்போன்கள்
மீட்கப்பட்ட செல்போன்கள்

சென்னையில் சைபர் க்ரைம் பிரிவு தொடங்கப்பட்ட 48 நாள்களில் 1,193 திருட்டு செல்போன்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகின்றன. செல்போன்களை வழிப்பறி செய்யும் கும்பலில் சிறுவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் நிலையங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு புகார்கள் பதிவாகிவந்தன. செல்போன்களை பறிகொடுத்தவர்களில் சிலர் காவல் நிலையங்களில் புகார்களைக் கொடுப்பதில்லை. கொரோனா ஊரடங்கிலும் இந்தக் குற்றச் சம்பவங்கள் நடந்தன. குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கமானது.

செல்போன் ஒப்படைப்பு
செல்போன் ஒப்படைப்பு

இந்தச் சூழலில்தான் சென்னையிலுள்ள 12 காவல் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவினர் திருட்டு செல்போன்கள், காணாமல்போன செல்போன்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். ஐஎம்இஐ நம்பர் மூலமாகவும், செல்போன் நிறுவனங்களின் உதவியாலும் 1,193 செல்போன்களை 48 நாள்களில் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். அதை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு முதற்கட்டமாக 240 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை: `திருடிய நகைகள் காதலிக்கு; ரூ.20,000 செல்போன் ரூ.2,000’ - சிக்கிய சிறுவர்கள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வடக்கு மண்டலத்தில் 333 செல்போன்களும், மேற்கு மண்டலத்தில் 218 செல்போன்களும், தெற்கு மண்டலத்தில் 424 செல்போன்களும், கிழக்கு மண்டலத்தில் 217 செல்போன்களும் என மொத்தம் 1,193 செல்போன்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் செல்போன்களை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறோம்.

செல்போன் ஒப்படைப்பு
செல்போன் ஒப்படைப்பு

சைபர் க்ரைம் பிரிவு தொடங்கிய 48 நாள்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதவிர சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

செல்போன்கள் திருடப்பட்டாலும், வழிப்பறி செய்யப்பட்டாலும் தயங்காமல் சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுங்க மக்களே... கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவோம் என்கிறார்கள் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு