Published:Updated:

சென்னை: திமுக பிரமுகர் கொலை! -போலீஸ் இன்ஃபார்மருக்குக் காவல் நிலையம் அருகிலேயே ஸ்கெட்ச்

கொலைசெய்யப்பட்ட சம்பத்குமார்
கொலைசெய்யப்பட்ட சம்பத்குமார்

சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே பைக்கில் சென்ற தி.மு.க பிரமுகர் சம்பத்குமார் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். போலீஸ் இன்ஃபார்மராக இவர் செயல்பட்டதால் காவல் நிலையம் முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே நேற்றிரவு பைக்கில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் சென்றவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பினர். தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலைசெய்யப்பட்டவரின் முகம் சிதைந்து காணப்பட்டதால் அவர் யாரென்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் கொலைசெய்யப்பட்டவர், வந்த பைக்கின் முன்பகுதியில் ஓட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க நிர்வாகிகள் படங்களோடு சம்பத்குமார் என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து சம்பத்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது கொலை செய்யப்பட்டவர் சம்பத்குமார் என்பது உறுதியானது.

கொலைசெய்யப்பட்ட சம்பத்குமார்
கொலைசெய்யப்பட்ட சம்பத்குமார்

சம்பத்குமார், டி.பி.சத்திரம் 16-வது குறுக்குத்தெருவில் வசித்துவந்தார். தண்ணீர் கேன் பிசினஸ் செய்துவந்த சம்பத்குமார், தி.மு.க-வின் பேச்சாளராக இருந்தார். மேலும் இவர் போலீஸாருக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த ரகசிய தகவலைச் சொல்லும் இன்ஃபார்மராகவும் இருந்துவந்தார். இந்தநிலையில், சம்பத்குமார் கொலை வழக்கில் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் அண்ணாநகர் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பத்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

ஏழு வயது சிறுமி கொடூரக் கொலை... மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு மற்றொரு வழக்கில் 7 மாதச் சிறை!

இது குறித்து போலீஸார் கூறுகையில், `சம்பத்குமார் கொடுத்த தகவலின்படி கஞ்சா விற்பனை செய்ததாக டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ஹரிகுமார் உட்பட சிலரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தனர். அதனால் ஹரிகுமாருக்கும் சம்பத்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த ஹரிகுமார், தான், தன்னுடைய தந்தை சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த ஹரிகுமாரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனியாக நேற்றிரவு சம்பத்குமார் பைக்கில் அண்ணாநகர் காவல் நிலையம் அருகே சென்றுகொண்டிருப்பதை ஹரிகுமார் பார்த்திருக்கிறார்.

சம்பத்குமாரின் பைக்
சம்பத்குமாரின் பைக்
சொத்துத் தகராறில் விழுப்புரம் தி.மு.க பிரமுகர் கொலை! -10 மணிநேரத்தில் கொலையாளிகளை வளைத்த போலீஸ்

உடனே தன்னுடைய ஆதரவாளர்களை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் அருகே துணிச்சலாக சம்பத்குமாரின் தலை, முகத்திலேயே வெட்டி கொலை செய்துவிட்டு ஹரிகுமார் டீம் தப்பிச் சென்றிருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது .விசாரணைக்குப் பிறகு சரணடைந்த நான்கு பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றனர்.

காவல் நிலையம் அருகே போலீஸ் இன்ஃபார்மரும், தி.மு.க பிரமுகருமான சம்பத்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு