சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலுள்ள அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (59). இவர், திமுக 59-வது வட்ட கழகச் செயலாளராக இருந்துவருகிறார். மேலும், இவர் பிராட்வே பேருந்து நிலையம் அருகே கரும்புச்சாறு கடை நடத்திவருகின்றார். கோடைக்காலம் என்பதால், சௌந்தரராஜன், பிராட்வே பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அந்த தண்ணீர்ப் பந்தலுக்குத் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த இடத்துக்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சௌந்தரராஜனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சௌந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சௌந்தரராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொலையாளிகள் சரண்:
திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை தொடர்பாக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவரின் மகன் தினேஷ்குமார், இன்பம், கார்த்திக், குமரேசன் ஆகிய ஐந்து பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை சரணடைந்தனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய வசந்தகுமார் என்பவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடம் இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
கொலைசெய்யப்பட்ட சௌந்தரராஜன் அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைத்திருக்கிறார். மேலும், அவர் பிராட்வே பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைத்துள்ளார். அந்த தண்ணீர்ப் பந்தலுக்கு அருகேதான் அதிமுக பிரமுகர் கணேசன் கடைவைத்து நடத்தியுள்ளார். அந்த இடத்தில் சௌந்தரராஜன் தண்ணீர்ப் பந்தல் அமைக்கும்போதே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், இந்தத் தண்ணீர்ப் பந்தலில் அருகே ஒரு சுவரில் சுண்ணாம்பு அடிக்கும்போது இரண்டு பேருக்கும் தகராறு பெரிதாகியிருக்கிறது. இந்த ஆத்திரத்தில் கணேசன் தனது மகன் மற்றும் மூன்று பேருடன் வந்து சௌந்தரராஜனை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தண்ணீர்ப் பந்தல் அமைப்பதில் ஆரம்பித்த பிரச்னையில், திமுக பிரமுகர் ஒருவரை அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.