Published:Updated:

சென்னை: `உள்ளாட்சி தேர்தல் பகை?’ - வெட்டி கொல்லப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

கொலை செய்யப்பட்ட பரமகுரு
கொலை செய்யப்பட்ட பரமகுரு

சென்னை திருநின்றவூர் அருகே பட்டப்பகலில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை திருநின்றவூர், கொட்டாம்பேடு, லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் பரமகுரு (38). வழக்கறிஞர். பூந்தமல்லி வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இவரின் மனைவி ஷீபா (35) இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த பரமகுரு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு அருகே உள்ள அருந்தியர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் பணி நடந்து வருகிறது.

பரமகுரு
பரமகுரு
சென்னை: `கிரேன் டயர் பஞ்சர்!' - 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த தொழிலாளி

இந்தப்பணியை பரமகுரு நேற்று மாலை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதனால் சாலை ஓரத்தில் நின்றபடி போனில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல், பரமகுருவின் தலையில் அரிவாளால் வெட்டியது. அதனால் நிலை தடுமாறிய அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், மர்ம கும்பல் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியபடி பரமகுருவை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

இதையடுத்து அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது. பட்டப்பகலில் ஊராட்சி மன்றத் தலைவர் பொதுமக்கள் கண்முன்னால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத் தீப்போல பரவியது. அதனால் பரமகுருவின் ஆதரவாளர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் அங்கு திரண்டனர். இந்தக் கொலை குறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். பரமகுருவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சடலமாக பரமகுரு
சடலமாக பரமகுரு

இதற்கிடையில் பரமகுரு கொலையைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பொதுமக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் உயரதிகாரிகளும் வந்து ஆய்வு செய்தனர். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுருவை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்பகைத்தான் இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி சம்பவ இடத்துக்கு வந்து பரமகுருவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், `பரமகுரு, நல்ல மனிதர். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவார். அவரை இப்படி அநியாயமாக கொலை செய்து விட்டார்களே' என்று கூறினர்.

கொலை நடந்த இடத்தில்
கொலை நடந்த இடத்தில்
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுருவை பின்தொடர்ந்து 2 பேர் பைக்கில் வந்து அந்தப் பகுதியில் உள்ள கடையில் நீண்ட நேரம் நின்றுள்ளனர். அதன் பிறகு 2 பைக்குகளில் 4 பேர் வந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்துதான் பரமகுருவைக் கொலை செய்துள்ளனர். இவர்கள் பைக்கில் வரும் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் பதவியே இந்தக் கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது பரமகுருவின் தலையிலேயே வெட்டி விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்" என்றனர்.

பரமகுருவைச் கொலை செய்த கும்பல், செல்லும்போது ரத்தக்கறை படிந்த கத்தியை சாலையில் உரசியபடி சென்றுள்ளனர். அப்போது தீப்பொறி கிளம்பியது. அவர்களின் செயல்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு