சென்னை: மருத்துவமனையில் இரவு பகலாக பணி! - அதிகாலையில் மாடியில் இருந்து குதித்த டாக்டர்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து குதித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் விடுதி கட்டடத்திலிருந்து ஆர்த்தோ டாக்டர் ஒருவர் கீழே குதித்துவிட்டதாகத் தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் மற்றும் சக மருத்துவர்கள் சென்றனர். அப்போது அங்கு கண்ணன் என்ற முதுநிலை பயிற்சி மருத்துவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். 5 மணிநேர போராட்டத்துக்குப் பின்பு சிகிச்சைப் பலனின்றி டாக்டர் கண்ணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், டாக்டர் கண்ணன், உடுமலைப்பேட்டை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு தஞ்சை மெடிக்கல் கல்லூரி பேட்ஜ் எனத் தெரியவந்தது. இவர், எலும்பியல் துறையில் முதுகலை படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் காலை, இரவு எனப் பணியாற்றியுள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் திடீரென இன்று அதிகாலை அவர் மாடியிலிருந்து குதித்துள்ளார். டாக்டர் கண்ணனுக்கு அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், டாக்டர் கண்ணன் மரணத்துக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. அதுதொடர்பாக அவரின் நண்பர்கள், சக டாக்டர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டாக்டர் கண்ணனின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், அவர் தங்கியிருந்த அறையில் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். விடுதி மாடியில் இருந்து மருத்துவர் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.