Published:Updated:

30 நாளில் திருமணம்.. வரதட்சணை புகார் கொடுத்த பெண் டாக்டர்!

திருமணத்துக்கு முன் வரதட்சணை கேட்பதாக சென்னை பெண் டாக்டர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருமணம்
திருமணம்

சென்னை பெண் டாக்டர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, `நான் எம்.டி. படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றிவருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண இணையதளம் மூலம் எனக்கு வரன் பார்த்தார்கள். அப்போது 50 லட்சம் ரூபாய், மூன்றரை கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினர் கேட்டனர். இதையடுத்து, மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்ற எங்கள் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்ட 50 லட்சம் ரூபாயில் முன்பணமாக கார் வாங்குவதற்கு 10 லட்சம் ரூபாயைக் கொடுத்தனர். அந்தப் பணத்தில் மாப்பிள்ளையின் அம்மா பெயரில் புதிய கார் ஒன்றை அவர்கள் வாங்கியுள்ளனர்.

Marriage
Marriage

நவம்பர் 29-ம் தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டோம். மேலும், திருமண மண்டபத்துக்கும் கேட்டரிங் சர்வீஸுக்கும் வீடியோ என அனைத்துக்கும் முன்பணம் செலுத்தியுள்ளோம். காஞ்சிபுரத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண பட்டுச் சேலையும் வாங்கினோம். இந்த நிலையில், திருமணத்துக்கு முன் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மாப்பிள்ளையின் அம்மா பெயரில் எழுதித் தரும்படி எங்களைக் கட்டாயப்படுத்தினர். திருமணத்துக்கு முன் வரதட்சணையாக வீட்டை எழுதித் தரும்படி மாப்பிள்ளை வீட்டினர் கூறியதால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் நாயைக் கொண்டு எங்கள் குடும்பத்தினரை விரட்டினர். இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். அந்தப் புகார் விசாரணையில் உள்ளது.

இந்தப் பிரச்னைகளால் நான் கடும் மனஉளைச்சலில் உள்ளேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய மாப்பிள்ளை வீட்டினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாங்கள் வரதட்சணையாகக் கொடுத்த முன்பணத்தையும் திரும்பப் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ``எங்கள் மீது தவறான புகார்களைக் கொடுத்துள்ளனர். மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள். என்ன நடந்தது என்பதை விளக்கமாக உங்களிடம் விரைவில் தெரிவிப்பேன்" என்றார்.

dowry
dowry

இந்தப் புகாரை விசாரிக்கும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``இது வரதட்சணைப் புகார். எனவே, இருவீட்டினரையும் விசாரித்தபிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மணமகன் வீட்டினர் அளிக்கும் தகவலுக்குப்பிறகு இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்" என்றனர்.

இந்தப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இருவீட்டிலும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.