Published:Updated:

சென்னை: டாக்டர் கண்ணன் இறப்பதற்கு முன்..! - மரணத்தில் சந்தேகம் கிளப்பும் பெற்றோர்

டாக்டர் கண்ணன்
டாக்டர் கண்ணன்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட டாக்டர் கண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து டாக்டர் கண்ணன் (24) குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. டாக்டர் கண்ணன் மரணம் சக டாக்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர் மரணத்துக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் டாக்டர் கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மருத்துவமனையின் முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸாரும் டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

விடுதி
விடுதி

டாக்டர் கண்ணனின் உறவினர்கள் நம்மிடம். ``உயிரிழந்த கண்ணனின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம். இவரின் பெற்றோர் முருகேசன், முத்துலட்சுமி. கடந்த ஜூன் மாதம் ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவனாகக் கண்ணன் சேர்ந்தார். கடந்த 19-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்துள்ளார். வழக்கம்போல் அவரின் பெற்றோரிடம் செல்போனில் கண்ணன் பேசியுள்ளார். அப்போதுகூட அவர் நார்மலாகத்தான் பேசியிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணிடமும் கண்ணன் போனில் பேசியுள்ளார். அதன்பிறகு அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். இது நம்பும்படியாக இல்லை. எனவே, டாக்டர் கண்ணனின் மரணம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். கண்ணனை இழந்து அவரின் பெற்றோர் தவித்துவருகின்றனர்" என்றனர்.

டாக்டர் கண்ணன்
டாக்டர் கண்ணன்
சென்னை: மருத்துவமனையில் இரவு பகலாக பணி! - அதிகாலையில் மாடியில் இருந்து குதித்த டாக்டர்

டாக்டர் கண்ணனின் அப்பா முருகேசன், தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கண்ணீர்மல்கக் கூறினார். முதுமை, மகனின் இழப்பு ஆகியவற்றால் அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் தாமோதரன் யாதவ் கூறுகையில், ``முதுகலை மருத்துவ மாணவன் கண்ணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவர் நல்ல மனநிலையில்தான் இருந்தார். தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

நீதி கிடைக்கும் வரை போராடுவோம். டாக்டர் கண்ணனை இழந்து வாடும் பெற்றோருக்கு அரசு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கண்ணன், நன்றாகப் படிக்கக்கூடியவர். எம்.பி.பி.எஸ் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். அப்படிப்பட்ட ஒரு மாணவனை இழந்துவிட்டோம். மெரிட் அடிப்படையில் அவருக்கு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவந்த சூழலில் இப்படியொரு சோகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

டாக்டர் கண்ணனின் உறவினர்கள்
டாக்டர் கண்ணனின் உறவினர்கள்

டாக்டரின் கண்ணனின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யும்போது அதை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் வெளியிலிருந்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்தனர். அதற்கு ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு டாக்டர் கண்ணனின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு