Published:Updated:

சென்னை: `அதிகாலை அலாரம்; தலையில் காயங்கள் இல்லை!' - மருத்துவர் கண்ணன் மரணத்தில் சந்தேகம்

டாக்டர் கண்ணன்
டாக்டர் கண்ணன்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதுகலை படித்த டாக்டர் கண்ணன், மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரின் அண்ணன் நம்மிடம் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, வாசவி நகரைச் சேர்ந்தவர் முருகேசன், முத்துலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன் கணணன் (24). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் 2013-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை எம்.பி.பி.எஸ் படித்தார். பிறகு முதுகலை படிக்க விரும்பிய டாக்டர் கண்ணன் அதற்காக தயாராகினார். அவர் விருப்பப்பட்டபடியே சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் (ஆர்த்தோ - பி.ஜி) இடமும் கிடைத்தது. கடந்த ஜூன் 1-ம் தேதி கல்லூரியில் சேர்ந்தார். மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்த டாக்டர் கண்ணன், 19-ம் தேதி மாடியிலிருந்து விழுந்துவிட்டதாகப் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் கண்ணன்
டாக்டர் கண்ணன்
சென்னை: டாக்டர் கண்ணன் இறப்பதற்கு முன்..! - மரணத்தில் சந்தேகம் கிளப்பும் பெற்றோர்

இதையடுத்து கண்ணனின் பெற்றோர் சென்னை வந்தனர். பிணவறையிலிருந்த கண்ணனின் சடலத்தைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தன்னுடைய மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஏழுகிணறு காவல் நிலையத்தில் முருகேசன் புகாரிளித்தார். பின்னர், மருத்துவக்கல்லூரி டீன் அலுவலகத்தை கண்ணனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். மருத்துவக்கல்லூரி, போலீஸார் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு டாக்டர் கண்ணனின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

கண்ணனின் அண்ணன் இன்ஜினீயர் விஷ்ணுவர்தனிடம் பேசினோம். ``என்னுடைய தம்பி சிறுவயது முதலேயே டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தான். அதன்படி ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்தான். அதனால் அவனுக்கு தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்தது. எம்.பி.பி.எஸ் - படித்தபிறகு எம்.டி படிக்க வேண்டும் என ஆசைப்பட்டான். அப்போது ஆர்த்தோவை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்தான். சென்னையில் தங்கியிருந்து படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

விடுதி
விடுதி

இந்தச் சமயத்தில்தான் என்னுடைய தம்பி மாடியிலிருந்து விழுந்து விட்டதாக போனில் தகவல் தெரிவித்தனர். சென்னைக்கு வந்து பார்த்தபோது தம்பியின் உடலில் வெளிக்காயங்கள் இல்லை. கைகளில் சிராய்வு காயங்களும் தொடையில் காயங்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு டீனிடமும் போலீஸாரிடமும் எங்களின் சந்தேகத்தைக் கூறினோம். தற்போது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அதிகளவில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தலையில் காயங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. அந்த ரிப்போர்ட்டை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் என் தம்பியின் மரணத்தை தற்கொலை என்று கூறினார்கள். அதுவும் காதல் தோல்வி, வேலைப்பளூ என்று காரணம் சொல்லப்பட்டது.

என் தம்பி விருப்பத்துடன்தான் டாகடர் பணியைத் தேர்ந்தெடுத்தான. வேலைப்பளூ என்றால் நிச்சயம் அந்தத் தகவலை எங்களிடம் கூறியிருப்பான். காதல் தோல்வி என்று இன்னொரு காரணத்தைச் சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. அவனின் விருப்பத்தின்படிதான் நாங்கள் பெண் பார்த்து பேசி முடித்தோம். அந்தப் பெண்ணும் டாக்டர்தான். இருவரும் போனில் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக நிச்சயதார்த்தம் நடத்தவில்லை. கொரோனாவுக்குப் பிறகு சுபநிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தோம்.

முருகேசன், முத்துலட்சுமி
முருகேசன், முத்துலட்சுமி

என் தம்பிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாததால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மருத்துவக் கல்லூரி தரப்பிலிருந்து எந்தத் தகவலையும் வெளிப்படையாக சொல்லவில்லை. டாக்டர் கண்ணனின் மரணம் அதிர்ச்சியாக இருப்பதாக மட்டும் கூறுகிறார்கள். போலீஸ் தரப்பில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். என் தம்பியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தால் எதற்கு அதிகாலை 4.30 மணிக்கு என் தம்பி அலாரம் வைக்க வேண்டும். மாடியிலிருந்து விழுந்திருந்தால் ஏன் எலும்பு முறிவு ஏற்பட வில்லை. இதுபோல பல சந்தேங்கள் உள்ளன" என்றார்.

டாக்டர் கண்ணன் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மமுடிச்சுகள் போலீஸ் விசாரணையில் அவிழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு