Published:Updated:

`2 மாதங்களாக மகளுடன் ஏன் பேசவில்லை!'- கேள்விகேட்ட தோழியின் தாயைக் கொன்ற சென்னை டிரைவர்

கொலை செய்யப்பட்ட ரத்தினம்
கொலை செய்யப்பட்ட ரத்தினம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் டிரைவரிடம், என் மகளிடம் ஏன் 2 மாதங்களாகப் பேசவில்லை என்று தட்டிக்கேட்ட பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் டிரைவர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர், ஜீவா நகர் மெயின் தெருவில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (40). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சந்திரசேகருக்கும் புதுவண்ணாரப்பேட்டை, ஜீவாநகரைச் சேர்ந்த ரத்தினம் (58) என்பவரின் மகள் தனலட்சுமிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தனலட்சுமிக்கு திருமணமாகி 17 வயதில் மகள் உள்ளார்.

கொலை செய்யப்பட்ட ரத்தினம்
கொலை செய்யப்பட்ட ரத்தினம்
``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்

கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரசேகரின் மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் சந்திரசேகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துவந்தார். மனைவி இல்லாததால் சந்திரசேகரின் வீட்டுக்கு தனலட்சுமி அடிக்கடி வந்து சென்றார். இந்தச் சமயத்தில் தனலட்சுமியின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்தன. அதனால் அவரிடம் பேசுவதை சந்திரசேகர் தவிர்த்தார்.

இது, தனலட்சுமிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் தனலட்சுமிக்கு சந்திரசேகர் கொடுத்துவந்த பணத்தையும் திடீரென நிறுத்தினார். இதனால், தனலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்றிரவு சந்திரசேகர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை ரத்தினம், தனலட்சுமி மற்றும் அவரின் 17 வயது மகள் ஆகியோர் தட்டினர். கதவைத் திறந்த சந்திரசேகர், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

அதற்கு ரத்தினம், நீங்கள் ஏன் 2 மாதங்களாக என் மகளுடன் பேசுவதில்லை. பணமும் கொடுப்பதில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சந்திரசேகர், முதலில் உங்கள் மகளைக் கண்டித்து வையுங்கள் என்று பதிலளித்தாகச் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் சந்திரசேகரை மூன்று பேரும் அவதூறாகப் பேசியுள்ளனர். அப்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சந்திரசேகரின் வேனின் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர் கத்தியால் ரத்தினத்தைக் குத்தியுள்ளார். அதை தனலட்சுமியும் அவரின் 17 வயது மகளும் தடுத்துள்ளனர். இதில் அவர்கள் இருவருக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது. மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

ரத்தினம்
ரத்தினம்

சம்பவ இடத்துக்கு புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் சென்றனர். போலீஸார் செல்வதற்குள் ரத்தினம், சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்தார். மற்ற இருவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தினத்தின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து ரத்தினத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக சந்திரசேகரை போலீஸார் கைது செய்தனர்.

சந்திரசேகரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சந்திரசேகருக்கும் தனலட்சுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் எல்லை மீறியுள்ளது. அது தனலட்சுமியின் அம்மாவுக்கு தெரியும். தனலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது சந்திரசேகரின் மனைவியும் சென்னையில் இல்லை. இந்தச் சமயத்தில் சமீபகாலமாக தனலட்சுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அதை சந்திரசேகர் கண்டித்துள்ளார். ஆனால் தனலட்சுமி கேட்கவில்லை. அதனால்தான் தனலட்சுமியுடன் பேசுவதை சந்திரசேகர் தவிர்த்ததோடு பணம் கொடுக்கவில்லை.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இதனால்தான் ரத்தினம், தனலட்சுமி அவரின் மகள் ஆகியோர் சந்திரசேகரிடம் நேற்றிரவு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்தினம், சில உண்மைகளை வெளியில் சொல்வதாகக் கூறி சந்திரசேகரை மிரட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரத்தினத்தை சந்திரசேகர் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது சந்திரசேகரின் வாழ்க்கையில் என்கின்றனர் அந்தப்பகுதி மக்கள். நள்ளிரவில் நடந்த கொலைச் சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு