Published:Updated:

சென்னை: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த டிரைவர்! - சிசிடிவி-யால் கைதான நண்பன்

டிரைவர்  மரணத்தைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி
டிரைவர் மரணத்தைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி

கிணற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்திருந்த டிரைவரை அவரின் நண்பர், குடிபோதையில் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதால் உயிரிழந்தார். இந்த வழக்கில் டிரைவரின் நண்பரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அஸ்தினாபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்மன் (37). ஐடி நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார். இவரின் நண்பர் கார்த்திக் (36). இவர்கள் இருவரும் கடந்த 5.7.2021-ம் தேதி அஸ்தினாபுரம், திருமலைநகர் விரிவாக்கம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளித்தனர். அப்போது புருஷோத்தம்மன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் போலீஸார், புருஷோத்தம்மனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே" - இளைஞரைக் கொலை செய்த கும்பல்!
 மரணம்
மரணம்

இது குறித்து புருஷோத்தம்மனின் மனைவி அனுசுயா கொடுத்த புகாரில், ``எனக்கும் புருஷோத்தமனுக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகின்றன. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் புருஷோத்தமனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 5-ம் தேதி விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றவர், நீரில் மூழ்கிவிட்டதாக உறவினர் பாபு என்பவர் என்னிடம் தெரிவித்தார். உடனே நான் சம்பவ இடத்துக்குச் சென்றபோது புருஷோத்தம்மன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனே ஆட்டோவில் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே, விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்குப் பிறகு கணவரின் சடலத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கிணற்றில் குளித்துவிட்டு புருஷோத்தமன் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது குடிபோதையிலிருந்த கார்த்திக், தன்னுடைய காலால் புருஷேத்தமனை எட்டி உதைத்தார். அதனால் கிணற்றுக்குள் விழுந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது, குடி போதையில் நடந்ததா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு