Election bannerElection banner
Published:Updated:

`டிபன் வாங்கி வருவதற்குள்..!' - மகனுடன் மதுஅருந்திய தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பன்

மகன் ஸ்ரீகாந்த் ராஜ்
மகன் ஸ்ரீகாந்த் ராஜ்

சென்னை ஆழ்வார்திருநகரில் தந்தை, மகன், அவரின் நண்பர் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது டிபன் வாங்க தந்தை சென்ற நிலையில், மகன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தை - மகன்

சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜ் (29). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஸ்ரீகாந்த் ராஜ், கார் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். அவ்வப்போது ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய ஸ்ரீகாந்த் ராஜ், தன்னுடைய நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து நேற்றிரவு மது அருந்த முடிவு செய்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் ராஜ், ஆழ்வார்திருநகரில் உள்ள அப்பா பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு நண்பருடன் சென்றார். அங்கு மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.

Representational Image
Representational Image

இந்தச் சமயத்தில் டிபன் வாங்க பாலசுப்பிரமணியன் வெளியில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீகாந்த் ராஜ், கார்த்திக் ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர். டிபன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீகாந்த் ராஜ், மயங்கிக் கிடந்தார். அதைப்பார்த்த பாலசுப்பிரமணியன், கார்த்திக்கை தேடியுள்ளார். ஆனால், அவர் வீட்டில் இல்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு ஸ்ரீகாந்த் ராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீகாந்த் ராஜ், ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.

யார் கெத்து?

இதையடுத்து ஸ்ரீகாந்த் ராஜ் மரணம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர் ஸ்ரீகாந்த் ராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய கார்த்திக்கை போலீஸார் தேடிவருகின்றனர். அவரிடம் விசாரித்தால்தான் ஸ்ரீகாந்த் ராஜ் கொலைக்கான காரணம் தெரியவரும்.

Representational Image
Representational Image
சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மீது கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு நடத்தி வருகிறோம். அதில் கார்த்திக் வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மது அருந்தும்போது என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. மேலும் ஸ்ரீகாந்த் ராஜிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி நிலவி வந்துள்ளது. அதனால் இந்தக் கொலைக்கும் அந்தக் கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு