Published:Updated:

`9-ம் தேதி வந்துவிடுவோம்!' - குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற சென்னை டிரைவருக்கு நேர்ந்த சோகம்

சென்னையிலிருந்து குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற வாடகைக் கார் டிரைவரைக் கொலை செய்துவிட்டு, காரைக் கடத்திய கும்பலைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

murder
murder

சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவரின் காரை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகநாதன், வாடகைக்கு ஓட்டிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகநாதனிடம் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாடகைக்கு கார் கேட்டுள்ளது. அதற்கு நாகநாதனும் சம்மதித்துள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு குரோம்பேட்டையிலிருந்து ஒரு பெண், மூன்று ஆண்கள் என 4 பேரை காரில் சென்னையிலிருந்து குற்றாலத்துக்கு நாகநாதன் அழைத்துச் சென்றுள்ளார்.

murder
murder

8-ம் தேதி இரவு நெல்லையில் இருப்பதாக டிரைவர் நாகநாதன் சுந்தரிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, `9-ம் தேதி காலையில் சென்னை வந்துவிடுவோம்' என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வரவில்லை. அவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அசோக்நகர் காவல் நிலையத்தில் சுந்தர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் டிரைவர் நாகநாதனைத் தேடினோம். இந்த நிலையில் மதுரை மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அழுகிய நிலையில் டிரைவர் நாகநாதனின் சடலத்தைக் கண்டுபிடித்தோம். இதனால் சுற்றுலாவுக்கு நாகநாதனை அழைத்துச் சென்றவர்கள்தான், அவரைக் கொலை செய்துவிட்டு காரையும் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் யார் என்று தேடிவருகிறோம்.

காதல் விவகாரத்தில் தீ வைத்து இளைஞர் கொலை!- அதிர்ச்சியில் தாய் மரணம்

இதற்கிடையில் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரைக் கடத்திய கும்பலில் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்துள்ளோம். அதைக் கொண்டு விசாரித்தபோது அது திருட்டு போன ஒருவரின் செல்போன் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அந்த செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிரைவரைக் கொலை செய்துவிட்டு காரைக் கடத்திய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

கொலை செய்யப்பட்ட நாகநாதனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஓடக்கரை கிராமம் ஆகும். அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.