Published:Updated:

`நாட்டு வெடிகுண்டுகள்; ஹெல்மெட் தகராறு' - அடுத்தடுத்து மகன்களின் மரணத்தால் கலங்கும் தாய்

கொலை செய்யப்பட்ட ஷியாம்குமார்
கொலை செய்யப்பட்ட ஷியாம்குமார்

சென்னையில் 2 மகன்களையும் இழந்த தாய், கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சென்னை மேடவாக்கம் - தாம்பரம் பிரதான சாலையில் மேடவாக்கம் சந்திப்பு பஸ் நிலையம் பின்புறம் ஏரிக்கரையில் இளைஞர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞரின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இறந்து கிடந்தவர் சென்னையை அடுத்த செம்பாக்கம், டெல்லர்ஸ் அவென்யூ, அஞ்சுகம் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம்குமார் (33). இவர் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர் வினோத் ஆகியோர் காமராஜபுரம், அம்பேத்கர் தெருவில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சேலையூரைச் சேர்ந்த சிவா என்கிற திருட்டு சிவாவும் மேடவாக்கத்தைச் சேர்ந்த அஜித்தும் பைக்கில் அங்கு வந்துள்ளனர். அப்போது அஜித், தலையில் அணிந்த ஹெல்மெட்டைக் கழற்றாமல் அங்கு நின்றுள்ளார். அதனால் அஜித்தை ஹெல்மெட்டைக் கழற்றும்படி ஷியாம் கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரவு 9.30 மணியளவில் ஷியாம்குமார், வினோத் ஆகியோரை அஜித், சிவா தரப்பினர் மேடவாக்கத்தில் உள்ள மைதானத்துக்கு வரவழைத்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அடுத்து ஷியாம்குமார், வினோத்தை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்தக் கும்பலிடமிருந்து வினோத் தப்பி ஓடிவிட்டார். ஆனால் ஷியாம்குமார் சிக்கிக்கொண்டார். அதனால் ஷியாம்குமாரை அந்தக் கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது" என்றனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - தலையணையால் அமுக்கிக் கொன்ற கணவன் கைது

இதுகுறித்து ஷியாம்குமாரின் அம்மா ராதா, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

என் கணவர் விஜய சண்முகம் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எனக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் ஷியாம்குமார். 2-வது மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகன் விஸ்வநாதன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

மூத்த மகன் ஷியாம்குமார், டிரஸ்ட் ஒன்றில் 3 ஆண்டுகளாக கார் ஓட்டிவந்தான். கொரோனா ஊரடங்கையொட்டி காய்கறிகளை வேனில் ஏற்றி வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்துவந்தான். கடந்த 6-ம் தேதி மாலை 6 மணி வரை ஷியாம்குமார் வீட்டுக்கு வரவில்லை. அதனால் அவனின் செல்போனில் பேசினேன். அப்போது வினோத்துடன் பேசிக்கொண்டிருப்பதாக ஷியாம்குமார் கூறினான். பின்னர், அங்கு நடந்த தகராறு குறித்தும் தெரிவித்தான். உடனே நான் பிரச்னை எதுவும் வேண்டாம் என்றும் வீட்டுக்கு வரும்படி கூறினேன். அதற்கு ஷியாம்குமார், என்னுடன் வினோத் இருக்கிறான். பிரச்னை எதுவும் இல்லை. சீக்கிரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாக போனில் கூறினான்.

`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்
கொலை
கொலை
மாதிரிப் படம்

அதன்பிறகு நான் போன் செய்தபோதுதான் ஷியாம்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே என் மகனைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ் போலீஸிடம் சிக்கியுள்ளார். தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஹெல்மெட்டைத் தலையிலிருந்து கழற்றக் கூறிய தகராறு கொலையில் முடிந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு