Published:Updated:

சென்னை: மனைவி மீது சந்தேகம்; தவிக்கும் குழந்தைகள்! - தாயின் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட கோமதி
கொலை செய்யப்பட்ட கோமதி

சென்னையில் மனைவி மீதான சந்தேகத்தால் கொலை செய்த வழக்கில் கணவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சின்ன நீலாங்கரை மேட்டுக் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (எ) நீலஹரி(40). இவரின் மனைவி கோமதி (35). இந்தத் தம்பதியருக்கு 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கிறார்கள். ஹரி, எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவருகிறார். கோமதி, சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிந்துவந்தார்.

ஹரி
ஹரி

நேற்று மதியம், நீலாங்கரை காவல் நிலையத்துக்கு ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு ஹரி வந்தார். அதைப் பார்த்த போலீஸார், என்னவென்று அவரிடம் விசாரித்தபோது, `என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்' என்று ஹரி கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், ஹரியை அழைத்துக்கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்றனர். அதற்குள் கோமதியை அவரின் அம்மா காதர் பீ மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அங்கு கோமதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து கோமதியின் சடலத்தை மீட்ட நீலாங்கரை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் நிலையத்தில் சரணடைந்த ஹரியிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கோமதியின் நடத்தையில் ஹரி சந்தேகப்பட்டு, அவருடன் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் கோமதியின் கழுத்தைக் கத்தியால் அறுத்து, ஹரி கொலை செய்திருக்கிறார். அதனால் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

எஃப்.ஐ.ஆர் நகல்
எஃப்.ஐ.ஆர் நகல்

இதற்கிடையில் கோமதியின் கொலை தொடர்பாக அவரின் அம்மா காதர் பீ என்பவர், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் விருகம்பாக்கத்தில் குடியிருந்துவருகிறேன். என் கணவர் இறந்துவிட்டார். எனது மூத்த மகள் கோமதி. 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தாள். 2005-ம் ஆண்டு சின்ன நீலாங்கரையைச் சேர்ந்த ஹரி என்பவருக்கு கோமதியை திருமணம் செய்து கொடுத்தோம். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எலெக்ட்ரிஷியன் வேலை பார்க்கும் ஹரி, சரிவர வேலைக்குச் செல்ல மாட்டார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதன் பிறகு அவர்களாகவே சமாதானமாகிவிடுவார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தினரோடு கோமதி தங்கியிருந்தார். 2019-ம் ஆண்டு சின்ன நீலாங்கரை மேட்டுக் காலனிக்கு கோமதி குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். இந்தச் சமயத்தில்தான் அவளுக்கு சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக கொரோனா டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்தது. நீலாங்கரை மேட்டுக் காலனிக்கு குடிவந்த பிறகு கோமதியை சந்தேகப்பட்டு அடிப்பதை எனது மருமகன் ஹரி வழக்கமாக வைத்திருந்ததாக எனது மகள் அடிக்கடி என்னிடம் போன் மூலம் தெரிவிப்பாள். சில நேரங்களில் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமதானப்படுத்திவிட்டு நான் செல்வேன்.

கொலை
கொலை
representational image

17.12.2020-ல் கோமதி என்னிடம் போனில் பேசினாள். அப்போது ஹரி மீண்டும் தன்னுடைய நடத்தையைச் சந்தேகப்பட்டு தகராறு செய்வதாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறினாள். அதற்கு நாளை (18-ம் தேதி) வீட்டுக்கு வருகிறேன் என்று நான் கூறினேன். அதன்படி கோமதி வீட்டுக்குச் சென்றேன். அப்போது வேலைக்குச் செல்லாமல் ஹரி, கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நான் எதற்காக என் மகளைச் சந்தேகப்பட்டு சண்டை போடுகிறாய் என்று ஹரியிடம் கேட்டேன். அதற்கு ஹரி, `உன் வேலையைப் பார்த்துக்கொண்டு ஒழுங்காகப் போய்விடு’ என்று என்னைத் திட்டினார். அதனால் கோமதி என்னிடம், `நீ வெளியில் இரும்மா. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினாள்.

அதனால் நான் வீட்டைவிட்டு வெளியில் வந்தேன். நான் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கருதிய ஹரி, மீண்டும் கோமதியிடம் தகராறில் ஈடுபட்டார். திடீரென வீட்டுக்குள்ளிருந்து என் மகள் கோமதியின் அலறல் சத்தம் கேட்டடது. உடனே நான் ஓடிபோய் பார்த்தபோது ஹரி, கோமதியைத் தரையில் படுக்க வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தான். நான், `ஐயோ எனது மகளைக் கொல்லப் பார்க்கிறான். யாராவது காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டேன். அதைக் கேட்டதும் கத்தியோடு வந்த ஹரி, என்னைத் தள்ளிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

கொலை
கொலை

நான் கோமதி அருகில் சென்று பார்த்தபோது, அவளின் இடதுபக்கக் கழுத்து, இடது கை மணிகட்டு ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. பின்னர் உறவினர் ஒருவர் மூலம் கோமதியைத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு அவள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது மகள் கோமதியை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மருமகன் ஹரி மீது நடவடிக்கை ஏடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்த வழக்கில் ஹரி சிறைக்குச் சென்றுவிட்டார். தற்போது இரண்டு குழந்தைகளும் அம்மா, அப்பா இல்லாமல் தவித்துவருகின்றனர். இரண்டு குழந்தைகளையும் கோமதியின் அம்மா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு