Published:Updated:

`யூடியூப் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டேன்!' - ஏடிஎம் கொள்ளையில் சிக்கிய சென்னை இன்ஜீனியர்

இன்ஜினீயர் உதயசூரியன்
இன்ஜினீயர் உதயசூரியன்

`கம்பெனியைத் திடீரென மூடியதால் 40,000 ரூபாய் சம்பளத்தை இழந்தேன். பங்குச் சந்தையில் முதலீடு செய்த செட்டில்மென்ட் தொகை 18 லட்சம் ரூபாயும் நஷ்டமடைந்தது. அதனால்தான் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க முடிவு செய்தேன்' என இன்ஜினீயர் உதயசூரியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இன்ஜினீயர் உதயசூரியன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், போலீஸ் விசாரணையில், ``நான் திருநின்றவூர், பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் குடியிருந்துவருகிறேன். டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்துள்ளேன். பெருங்களத்தூரில் உள்ள கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றினேன். மாதம் 40,000 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

ஏடிஎம்
ஏடிஎம்

கடந்த மார்ச் மாதம் நான் வேலைபார்த்த கம்பெனியைத் திடீரென மூடிவிட்டார்கள். இதனால் வேலையை இழந்தேன். வேறுவேலை தேடி அலைந்தேன். ஆனால், சரியான வேலை கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள மருந்தகத்தில் மாதம் 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. நல்ல வேலை கிடைக்கும்வரை அந்த வேலையைத் தற்காலிகமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் வேலைபார்த்த கம்பெனியிலிருந்து செட்டில்மென்ட் தொகையாக 18 லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை இரட்டிப்பாக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக நான் முதலீடு செய்த பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை இழந்ததால் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தேன்.

பைக்
பைக்

இதனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று இணையதளத்தில் தேடினேன். மேலும், ஹாலிவுட் படங்களை அதிகம் பார்ப்பேன். அப்போது, ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தால் குறுகிய காலத்தில் பணக்காரனாகிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. உடனே யூடியூபில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிப்பது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களைப் பார்த்தேன். எல்லா ஏடிஎம்களிலும் சிசிடிவி கேமரா இருக்கும். அதனால் சிசிடிவி கேமராவில் சிக்காமல் கொள்ளையடிப்பதை வீடியோ மூலம் பார்த்து தெரிந்துகொண்டேன்.

`80 மணி நேரம் ஆட்சி, டிராமா... ரூ.40,000 கோடி நிதி'! - ஃபட்னாவிஸ் பதவியேற்பு குறித்து ஹெக்டே

ஏடிஎம் எந்திரங்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும். இதனால் ஏடிஎம் எந்திரங்களை எப்படி உடைப்பது என்பதையும் வீடியோ மூலம் கற்றுக்கொண்டேன். அதற்குத் தேவையான சிறிய அளவிலான கடப்பாரை, சிசிடிவி கேமராக்களில் சிக்காமலிருக்க கலர் ஸ்ப்ரே ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கினேன். வழக்கமாக நான் வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகிவிடும். அந்தச் சமயத்தில் ரோட்டில் ஆள்நடமாட்டம் குறைவாக இருக்கும்.

ஏடிஎம்
ஏடிஎம்

அப்போது செக்யூரிட்டி இல்லாத ஏடிஎம்களை நோட்டமிட்டபடி சென்றேன். கும்மிடிப்பூண்டியிலிருந்து மின்சார ரயிலில் திருநின்றவூர் ரயில் நிலையத்துக்கு வரும் நான், இரவில் பெரியபாளையம் ரோடு வழியாக வீட்டுக்குச் செல்வேன். அப்போது திருநின்றவூர் ரவுண்டானா அருகே செக்யூரிட்டி இல்லாமல் இரண்டு ஏடிஎம் மையங்கள் இருப்பதைப் பார்த்தேன். கடந்த அக்டோபர் மாதம் ஒரு ஏடிஎம் மையத்துக்கு கடப்பாரை, கலர் ஸ்ப்ரே ஆகியவற்றைக் கொண்டு சென்றேன். அந்தச் சமயத்தில் போலீஸ் ரோந்து வாகனம் அவ்வழியாக வந்தது. இதனால் கொள்ளையடிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

அடுத்து, 19.10.2019-ல் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட தனியார் ஏடிஎம்முக்குச் சென்றேன். அங்குள்ள சிசிடிவி கேமராவுக்கு கலர் ஸ்ப்ரே அடித்தேன். சிசிடிவியில் சிக்காமலிருக்க பைக்கையும் ஏடிஎம் மையத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினேன். கடப்பாரை மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைக்கும் கதவை முதலில் திறந்தேன். அதன்பிறகு பணம் வைத்திருந்த ஒவ்வொரு லாக்கர்களையும் உடைத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்தேன். மொத்தம் 4,05,000 ரூபாய் இருந்தது.

`அந்த 2 ஏடிஎம் கார்டுகள் எங்கே?' -   கொள்ளையன் பணத்தைக் களவாடிய பெண் இன்ஸ்பெக்டர்

அந்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். அதிலும் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அடுத்த ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம்மை நீண்டநாளாக நோட்டமிட்டேன். 5-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஏடிஎம் அறைக்குள் சென்றேன். அப்போது ஏடிஎம்மை உடைக்கும்போது சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க ஷட்டரை மூடினேன். சிசிடிவி கேமராவுக்கு கலர் ஸ்பிரே அடித்துவிட்டு பணம் வைக்கும் லாக்கரை உடைத்தேன். பணத்தை எடுக்க அடுத்த லாக்கரை உடைப்பதற்குள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

உதயசூரியன், சில ஆண்டுகளுக்கு முன் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஏடிஎம்களில் உதயசூரியன் திருடுவது அவரின் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாது என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு