Published:Updated:

சென்னை: `ஈஸியாக டைவர்ஸ் வாங்கித் தருகிறேன்!' - கல்லூரித் தோழியை ஏமாற்றிய இன்ஜினீயர்

கல்லூரித் தோழிக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய இன்ஜினீயர் மதன்குமாரை போலீஸார் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர் பெருங்குடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு திவாகர் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவாகருக்கும் லட்சுமி பிரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கணவரைப் பிரிந்த லட்சுமி பிரியா, மகளோடு தனியாக வசித்துவருகிறார்.

போலி அடையாள அட்டை
போலி அடையாள அட்டை

இந்தச் சூழலில் லட்சுமி பிரியாவுடன் கல்லூரியில் படித்த புழல், இந்திரா நகரைச் சேர்ந்த மதன்குமார் (32) என்பவரிடம் திவாகரை விவாகரத்து செய்ய உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார். அதற்கு மதன்குமாரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து லட்சுமி பிரியாவிடம், பிரபல வழக்கறிஞர் ஒருவர் மூலம் விவாகரத்து பெற ஏற்பாடு செய்திருப்பதாக மதன்குமார் கூறியிருக்கிறார். வழக்கு செலவுக்காகப் பல கட்டங்களாக மதன்குமார் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால், விவாகரத்து கிடைக்கவில்லை. அதன் பிறகே மதன்குமாரிடம், `விவாகரத்து வழக்கு என்னாச்சு?’ என்று லட்சுமி பிரியா கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் லட்சுமி பிரியா, புகாரளித்தார். அதில், `தன்னுடன் கல்லூரியில் படித்த மதன்குமார், சிறைத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவருவதாகத் தெரிவித்தார். அதை நம்பி அவரிடம் என்னுடைய டைவர்ஸுக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். அதற்கு சம்மதித்த மதன்குமார், சிறைத்துறையில் பணியாற்றுவதால் தனக்குத் தெரிந்த பிரபல வழக்கறிஞர் மூலம் ஈஸியாக டைவர்ஸ் வாங்கிவிடலாம் என்று கூறிய மதன்குமார், என்னிடமிருந்து பல தவணைகளாக 13 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால் டைவர்ஸ் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தைக் கேட்டதற்கு எனக்கு மதன்குமார் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, மதன்குமார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

arrest
arrest

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்கு பதிவு செய்து மதன்குமாரிடம் விசாரித்தார். அப்போது அவர் சிறைத்துறையில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர் புழல் சிறையில் பணியாற்றுவதுபோல போலியாக அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, மதன்குமாரைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் மதன்குமாரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலி இன்ஸ்டா அக்கவுன்ட்; முன்னாள் காதலியின் அத்தைக்கு போன்! - `டார்ச்சர்’ இளைஞரைத் தேடும் போலீஸ்

இது குறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட மதன்குமாரும், புகாரளித்த லட்சுமி பிரியாவும் ஒரே கல்லூரியில் படித்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டு முகநூல் மூலம் மதன்குமாரும் லட்சுமி பிரியாவும் பழகியிருக்கின்றனர். அப்போது மதன்குமார், தன்னுடைய தந்தை புழல் சிறையில் துணை ஜெயிலராகப் பணியாற்றிவந்ததாகவும், அவர் இறந்த பிறகு சிறைத்துறையில் தனக்கு வேலை கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். அதை உண்மையென லட்சுமி பிரியா நம்பியிருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய திருமண வாழ்க்கையை குறித்து மதன்குமாரிடம் லட்சுமி பிரியா கூறியதோடு கணவர் திவாகரை டைவர்ஸ் செய்ய உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார்.

புழல் சிறை
புழல் சிறை

இதையடுத்து பிரபல வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஈஸியாக டைவர்ஸ் வாங்கி விடலாம் என்று மதன்குமார் கூறியிருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதன்குமார் தெரிவித்ததால் பல கட்டங்களாக அவர் கேட்ட பணத்தையும் லட்சுமி பிரியா கொடுத்திருக்கிறார். ஆனால் டைவர்ஸ் வழக்கு தொடர்பாக மதன்குமார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி பிரியா, புகாரளித்தார். மதன்குமாரிடம் விசாரித்தபோது அவர், தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்துவருவது தெரியவந்தது. கல்லூரித் தோழியான லட்சுமி பிரியாவிடம் சிறை அதிகாரி என்று கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு