Published:Updated:

`இன்ஸ்டாகிராமில் வலை; நம்பவைக்க காதல்!' -சென்னை மாணவியால் சிக்கிய பி.டெக் இன்ஜினீயர்

இன்ஸ்டாகிராமில் மாணவிகளுடன் பழகும் சென்னை இன்ஜினீயர் சாய், முதலில் நம்ப வைப்பார். பின்னர் சம்பந்தப்பட்ட மாணவிகளின் நெருக்கமான புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துப் பணம் பறிப்பார் என்கின்றனர் போலீஸார்.

இன்ஜினீயர் சாய்
இன்ஜினீயர் சாய்

சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் அவரின் அம்மா வந்தார். இன்ஸ்பெக்டரைச் சந்தித்த மகளின் தாயார், என் மகள் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். அவர், இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பழகியுள்ளார். நேரில் சந்திக்காமல் இருவரும் காதலித்துள்ளனர். அந்த நபரை நம்பி, என் மகள் தன்னுடைய தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார். தற்போது என் மகளின் போட்டோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக ஒருவர் எனக்கு போனில் மிரட்டுகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மகளின் போட்டோக்கள் வெளியில் வராமல் தடுக்க வேண்டும்" என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

இன்ஜினீயர் சாயின் லேப்டாப்
இன்ஜினீயர் சாயின் லேப்டாப்

இந்தப் புகாரையடுத்து மிரட்டல் விடுக்கும் நபர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை போலீஸார் களமிறங்கினர். மிரட்டல் விடுத்த நபரை பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக, உதவி கமிஷனர்கள் ஆனந்தகுமார், ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர்கள் ரவி, ராமசாமி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டது. மாணவியின் அப்பாவின் செல்போன் நம்பருக்கு கால் செய்த மிரட்டல் நபர், 2 லட்சம் ரூபாயைக் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிக்குமாறு போலீஸார் சொல்ல, பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், பேசின் பாலம் பகுதிக்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்போல மப்டியில் போலீஸார் பேசின் பாலத்துக்குச் சென்றனர். அப்போது அந்த நபரும் அங்கு வந்தார். அவரிடம், `மாணவியின் போட்டோக்களை கொடுத்துவிடுங்கள்' என்று மப்டியில் இருந்த போலீஸார் கூறினர். உடனே, `பணம் எங்கே?' என்று அந்த நபர் கேட்டுள்ளார். உடனே ஒரு பையைக் காட்டிய போலீஸார், `அதில் நீங்கள் கேட்ட 2 லட்சம் ரூபாய் இருக்கிறது' என்று கூறியுள்ளனர்.

பணம்
பணம்

இந்தச் சமயத்தில் மறைந்திருந்த மற்ற போலீஸார் அந்த நபரைப் பிடித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரித்தபோது விருதுநகரைச் சேர்ந்த சாய் என்கிற ராஜா சிவசுந்தர் (28) என்று தெரியவந்தது.

பி.டெக் படித்த சாய், சென்னையில் திருமுல்லைவாயல், மடிப்பாக்கம், சேலையூர் ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினீயராகப் பணியாற்றியுள்ளார். சமூகவலைதளங்களில் பெண்களுடன் சேட்டிங் செய்வார். பின்னர், காதல் வலை விரிப்பார். சாயை நம்பிக் காதலிக்கும் மாணவிகளின் ஆபாசப் புகைப்படங்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலம் பெறும் சாய், அதை வைத்தே பணம் பறிக்கத் தொடங்குவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து சாய் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சாயின் லேப்டாப், அவர் பயன்படுத்திய செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் இன்னும் சில பெண்கள், மாணவிகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்தன.

லேப் டாப், செல்போன்கள்
லேப் டாப், செல்போன்கள்

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சாய் என்கிற ராஜா சிவசுந்தரத்தின் சொந்த ஊர் விருதுநகர். போலி அக்கவுன்ட்டுகளை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி, மாணவிகள், பெண்களுடன் பழகிவந்துள்ளார். பெரிய ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கைநிறைய சம்பளம் என்றும் கூறும் சாய், ஒருகட்டத்தில் உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறுவார்.

சாயின் பேச்சை நம்பும் மாணவிகளோடு தொடர்ந்து சேட்டிங் செய்வார். சிலரை நேரில் சந்தித்துப் பேசுவார். சாயை முழுமையாக நம்பும் மாணவிகளிடம், தனிப்பட்ட புகைப்படங்களை செல்போன் மூலம் அனுப்பச் சொல்வார். போட்டோக்கள், வீடியோக்கள் கைக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட மாணவி, பெண்ணின் பெற்றோருக்கு வேறு ஒரு செல்போன் நம்பரிலிருந்து பேசுவார். அப்போது, `உங்கள் மகளின் வீடியோ, போட்டோக்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிடாமலிருக்க 2 லட்சம் ரூபாய் கொடுங்கள்' என்று மிரட்டுவார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருக்கு ஒரு சில புகைப்படங்களை சாய் அனுப்பி வைப்பார்.

உங்கள் மகளின் வீடியோ, போட்டோக்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிடாமலிருக்க 2 லட்சம் ரூபாய் கொடுங்கள்.
சாய்

அந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடையும் பெற்றோர், சாய் கேட்கும் தொகையைக் கொடுக்க சம்மதிப்பார். பணம் கேட்பதில் சாய், ஒரு பாலிஸி வைத்துள்ளார். அதிகளவில் பணம் கேட்டால் போலீஸிடம் சம்பந்தப்பட்டவர்கள் செல்ல வாய்ப்புள்ளதால் 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கேட்பார்.

அதனால் சிலர் சாயிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து மகளின் படங்கள், வீடியோக்களை வாங்கிச் சென்றுள்ளனர். ஒருமுறை மிரட்டிப் பணம் வாங்கிவிட்டால் பின்னர் அவர்களை சாய் தொந்தரவு செய்யமாட்டார். வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் அப்பாவுக்கும் சாய் போட்டோ அனுப்பி 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியபோதுதான் சிக்கிக் கொண்டார்" என்றனர்.