Published:Updated:

`சிசிடிவி கேமராவுக்கு ஸ்பிரே; ஹாலிவுட் சினிமா!'- ஏ.டி.எம் மையங்களைக் குறிவைத்த சென்னை இன்ஜினீயர்

இன்ஜினீயர் உதயசூரியன்
இன்ஜினீயர் உதயசூரியன்

`நான் வேலைபார்த்த கம்பெனி திடீரென மூடப்பட்டதால் ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்தேன்' என சென்னைப் போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் உதயசூரியன் கூறியுள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு 5-ம் தேதி அதிகாலையில் மும்பையிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், `எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் கொள்ளையன் புகுந்துவிட்டான். அங்குள்ள சிசிடிவி கேமராவுக்கு ஸ்பிரே அடித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக்கொண்டிருக்கிறான்' என்று கூறினார். அதைக்கேட்டு முத்தாபுதுப்பேட்டை போலீஸார் உஷாராகினர். அன்றைய தினம் திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு இரவுப் பணி. அதனால் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் சென்றனர்.

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்

அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை கடப்பாரையால் இளைஞர் ஒருவர் உடைத்துக்கொண்டிருந்தார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். உடனடியாக ஏ.டி.எம் அறையின் ஷட்டரைப் போலீஸார் மூடினர். அதனால் அங்கிருந்து தப்பி ஓட முடியால் பொறியில் சிக்கிய எலி போல அந்த இளைஞர் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, அவரைப் பிடித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர் பயன்படுத்திய ஸ்பிரே, கடப்பாரை, பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில், ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடித்த நபரின் பெயர் உதயசூரியன் (32) என்பதும் திருநின்றவூர், பாக்கம், வெங்கடேஷ்வரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யபட்ட பைக்
பறிமுதல் செய்யபட்ட பைக்

டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் மாதம் 40,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துவந்துள்ளார், உதயசூரியன். கடந்த மார்ச் மாதம் அந்தக் கம்பெனி திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் 20,000 ரூபாய் சம்பளத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார். பணத்தேவை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக சில ஹாலிவுட் படங்களையும் இணையதளத்திலும் ஏ.டி.எம் கொள்ளை தொடர்பான தகவல்களைச் சேகரித்துள்ளார்.

இதையடுத்து, கும்மிடிப்பூண்டியிலிருந்து வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வரும் உதயசூரியன், ஆளில்லாத மற்றும் செக்யூரிட்டி இல்லாத ஏ.டி.எம் மையத்துக்குச் சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவார். இதுவரை நடந்த விசாரணையில் உதயசூரியன் ஒரு ஏ.டி.எம்-மில் கொள்ளையடித்துள்ளார். இன்னும் 2 ஏ.டி.எம்-களில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். 4 லட்சம் ரூபாய் வரையில் அவர் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

 ஏ.டி.எம்
ஏ.டி.எம்

உதயசூரியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நல்ல சம்பளத்தில் குடும்பத்தை நடத்திவந்த உதயசூரியன், வருமானம் குறைந்ததால் ஏ.டி.எம் கொள்ளையனாக மாறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், திருநின்றவூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம்மில் அவர் கொள்ளையடிக்க வந்துள்ளார். அப்போது போலீஸாரின் ரோந்து வாகனம் வந்ததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளார். இதுதான் அவரின் முதல் முயற்சி. அது தோல்வியடைந்த போதிலும் அடுத்தடுத்து ஏ.டி.எம் மையங்களைக் குறி வைத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசும் போலீஸார், ``லட்சக்கணக்கில் பணம் வைக்கும் ஏ.டி.எம் மையங்களில் செக்யூரிட்டிகளை வங்கி நிர்வாகம் பணியமர்த்துவதில்லை. இதுதான் கொள்ளைச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதுதொடர்பாக வங்கி நிர்வாகங்களுக்குப் பலமுறை தெரியப்படுத்திவிட்டோம். ஆனால், இன்றும் ஏராளமான ஏ.டி.எம்-கள் செக்யூரிட்டி இல்லாமல்தான் இயங்குகின்றன.

`அந்தப் பை முழுவதும் 2000, 500 ரூபாய் கட்டுகள்!' - ஏடிஎம் கொள்ளையனை நள்ளிரவில் பிடித்த ஆட்டோ டிரைவர்

உதயசூரியன் குறிவைத்த மூன்று ஏடிஎம்களிலும் செக்யூரிட்டிகள் இல்லை. அதனால் பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் கொள்ளையடித்து வந்துள்ளார். 19.10.2019-ல் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் 4,05,000 ரூபாயைக் கொள்ளையடித்துள்ளார்.

அந்த வழக்கில் சிசிடிவி கேமராவில் உருவம் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், ஏ.டி.எம் மையத்துக்கு பைக்கில் உதயசூரியன் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. புத்திச்சாலித்தனமாக போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க உதயசூரியன் செயல்பட்டபோதும் மும்பை தலைமை அலுவலக கேமரா அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு