Published:Updated:

`பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு; மெக்கானிக் ஷெட்டாக மாறிய வீடு!' -தடம் மாறிய சென்னை இன்ஜினீயர்

இன்ஜினீயர் ரமேஷிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டூல்ஸ்
இன்ஜினீயர் ரமேஷிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டூல்ஸ்

பைக் திருட்டு வழக்கில் வில்லிவாக்கம் போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் ரமேஷின் ஃப்ளாஷ்பேக் சற்று வித்தியாசமானது. திருடும்போது பைக்குகளின் பூட்டுகளை உடைக்கக் கூடாது என்பதை ரமேஷ் லாஜிக்காக வைத்துள்ளார்.

கொளத்தூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பைக்குகளைத் திருடிய வழக்கில் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் ஜான்பால், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், பி.பி.ஏ, படித்துவிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை திருடிவந்துள்ளார். ரமேஷிடம் நடத்திய விசாரணையில் அவரின் ஃப்ளாஷ்பேக் வெளியாகியுள்ளது.

ரமேஷ்
ரமேஷ்
`3 பெண்களுடன் நட்பு; காதல் பரிசாகத் திருட்டு பைக்குகள்!' - சென்னையில் சிக்கிய இன்ஜினீயர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``பைக் திருட்டு வழக்கில் பலரை நாங்கள் கைது செய்துள்ளோம். ஆனால் பைக் திருட்டில் கைதான ரமேஷின் கேரக்டர் வித்தியாசமாக உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷுக்கு ஓர் அண்ணன், 2 சகோதரிகள். அனைவரும் தனித்தனியாக வாழ்ந்துவருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு ரமேஷின் அண்ணனுக்கு விலை உயர்ந்த பைக் ஒன்றை குடும்பத்தினர் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதே பைக் வேண்டும் என ரமேஷ், வீட்டில் அடம் பிடித்துள்ளார். அப்போது பிறகு வாங்கித் தருகிறோம் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

பைக் மீதான தீராத மோகத்தால், பர்மா பஜாரில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் அதே மாடல் பைக்கை வாங்கியுள்ளார் ரமேஷ். அந்தப் பைக்கில் வீட்டுக்கு பந்தாவாக வந்திறங்கியுள்ளார். 2 நாள்களுக்குப் பிறகு டி.பி.சத்திரம் போலீஸார் பைக்கைத் திருடிய குற்றத்துக்காக ரமேஷைக் கைது செய்துள்ளனர். அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற ரமேஷ், சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்துள்ளார். அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அந்த வேலையிலிருந்து விலகியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

சொந்தமாக பிசினஸ் தொடங்கலாம் எனக் கருதிய ரமேஷ், யூடியூபில் வேலைவாய்ப்புகளைத் தேடியுள்ளார். மெக்கானிக்கல் தொடர்பாக பல தகவல்களைச் சேகரித்த ரமேஷ், ஓஎல்எக்ஸ் மூலம் பைக்குகளை வாங்கி விற்றுவந்துள்ளார். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால், பைக்குகளை திருடி விற்க முடிவு செய்துள்ளார். அதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை ரமேஷ் முதலில் நோட்டமிட்டுவார். பைக்குகளை திருடும்போது அவர் ஒரு லாஜிக் வைத்துள்ளார். பைக்கிற்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை, கடைப்பிடித்துவந்துள்ளார். அதனால், பைக்குகளின் பூட்டுகளை உடைக்காமல் கள்ளச்சாவிகளைப் போட்டு திறந்துள்ளார்.

லேடீஸ் ஓட்டும் பைக்குகளின் சீட்டுகளுக்கு கீழேதான் வாகனங்களின் ஆவணங்கள் இருக்கும். அதனால் தன்னிடம் இருக்கும் சாவிகள் மூலம் பைக்கின் சீட்டை திறந்து ஒரிஜினல் ஆவணங்களை முதலில் ரமேஷ் திருடிவந்துள்ளார். அந்த டூவிலரை பூட்டு உடைக்காமல் திருட முயன்றால் திருடுவார். இல்லையெனில் ஒரிஜினல் ஆவணங்களை மட்டும் திருடிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். பின்னர் அந்த ஆர்.சி புக் மாடல் வாகனங்களைத் தேடிச் சென்று பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திருடுவார். அந்த வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர்களை வீட்டில் வைத்தே மாற்றுவார். அப்போது ஆர்.சி புத்தகத்தில் உள்ள வாகனத்தின் நிறத்தையும் மாற்றுவார். இதற்காக வீட்டையே அவர் மெக்கானிக் ஷெட் போல வைத்துள்ளார்.

`சிரித்துப் பேசிய காதலி; விபரீத முடிவெடுத்த சென்னை மாணவர்' - தந்தையின் புகாரால் வெளிவந்த உண்மை
வில்லிவாக்கம் காவல் நிலையம்
வில்லிவாக்கம் காவல் நிலையம்

பின்னர் அந்தப் பைக்கை ஓஎல்எக்ஸில் விற்பனை செய்துவிடுவார். போலீஸிடம் சிக்காமலிருக்க வாகனம் விற்பனை செய்யப்பட்டதும் அதுவரை பயன்படுத்திவந்த சிம்கார்டை தூக்கி எரிந்துவிடுவார். பின்னர் புதிய சிம்கார்டு மூலம் அடுத்த திருட்டு பைக்கை விற்கத் தொடங்குவார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பைக் திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளார். அவரிடம் இருந்து மூன்றரை லட்சம் மதிப்புள்ள 12 லேடீஸ் பைக்குகளைப்பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

எதற்காக முதலில் ஆர்.சி புக்குகளை திருடிவிட்டு பின்னர் அந்த மாடல் பைக்குகளை திருடுவது ஏன் என்று ரமேஷிடம் போலீஸார் கேட்டதற்கு, அவர் நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார். `நான் மெக்கானிக் இன்ஜினீயரிங் படிப்பை ஆசைப்பட்டு படித்தேன். மெக்கானிக் தொழில் என்பது எனக்கு உயிர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதான் பைக் திருட்டில் ஈடுபட்டேன். இருப்பினும் பைக்குகளைச் சேதப்படுத்துவது எனக்குப் பிடிக்காது. பூட்டுகளை உடைக்காமல் எந்த பைக்குகளைத் திருட முடியுமோ அதை மட்டும்தான் திருடுவேன்' என்று கூறியுள்ளார்.

`ஒரே கொள்ளை ஒஹோன்னு வாழ்க்கை!’- திருட்டு நகைகளைக் கொடுத்து காதலிகளின் மனதில் இடம்பிடித்த 3 இளைஞர்கள்
திருடப்பட்ட பைக்குகள்
திருடப்பட்ட பைக்குகள்

பறிமுதல் செய்யப்பட்ட 12 பைக்குகளில் ஒரு சில பைக்குகளுக்கு சாவி இல்லை. அதனால் அதை உடைக்க போலீஸார் முயற்சி செய்தபோது, `சார்... நான் திருடும்போதுகூட டூவிலர்களின் பூட்டை உடைக்க மாட்டேன். வீட்டில் கண்டிப்பாக சாவி இருக்கும். அதை எடுத்துவந்து திறங்கள்' என்று கூறியுள்ளார். பைக் திருட்டு வழக்கில் தனியொருவனாகவே செயல்பட்டதால் 2008-ம் ஆண்டுக்குப்பிறகு 2020-ல் ரமேஷ் சிக்கியுள்ளார். ரமேஷிடம் எங்கெல்லாம் பைக்குகளைத் திருடினாய் என்று போலீஸார் கேட்டபோது, டூவிலரின் நிறம், மாடல் என அனைத்து விவரங்களையும் கூறி போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

`ரமேஷிடம் உள்ள திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்தியிருந்தால் அவர் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு உயர்ந்திருப்பார். ஆனால், அவரின் வாழ்க்கை தடம் மாறியதால் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்' என்கின்றனர் வில்லிவாக்கம் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு