Published:Updated:

சென்னை: `நம்மில் ஒருவன் இல்லைன்னா என்ன செய்வீங்க?!' - முன்னாள் எம்.எல்.ஏ மகன் தற்கொலை பின்னணி

ஹரிகிருஷ்ணன்
ஹரிகிருஷ்ணன்

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளரும், அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வேதாச்சலத்தின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கொரட்டூர் காவல் நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, 11-வது தெருவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும், தற்போதைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளருமான வேதாச்சலம் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறார். இவரின் மகன் ஹரிகிருஷ்ணன் (35). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஹரிகிருஷ்ணனின் அறை இன்று காலை நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. அதனால் வீட்டிலுள்ளவர்கள் கதவைத் தட்டிப் பார்த்தனர். எந்தவித பதிலும் வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது ஹரிகிருஷ்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தற்கொலை
தற்கொலை
representational image

இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பொற்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஹரிகிருஷ்ணனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஹரிகிருஷ்ணனின் மரணம் குறித்து கொரட்டூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து கொரட்டூர் போலீஸார் கூறுகையில், ``ஹரிகிருஷ்ணன் தற்கொலை குறித்துத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். ஹரிகிருஷ்ணன் எம்.பி.ஏ வரை படித்திருக்கிறார். அவரின் மனைவி பெயர் சியாமளாதேவி. வேலைக்கு எங்கும் செல்லாமல் ஹரிகிருஷ்ணன் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சமீபகாலமாக அவரின் நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்திவந்துள்ளன.

ஹரிகிருஷ்ணன்
ஹரிகிருஷ்ணன்

மது அருந்தும் பழக்கமுள்ள ஹரிகிருஷ்ணன், தினமும் போதையிலேயே வீட்டுக்கு வந்திருக்கிறார். மேலும் அவர், கொரட்டூர் சுடுகாட்டு பகுதியிலிருக்கும் இடுகாட்டுப் பணியாளர்கள் மற்றும் லோக்கல் பாய்ஸ்களுடன் பழகிவந்திருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்குச் சில நாள்களுக்கு முன்னர், சுடுகாட்டுப் பகுதியில் அமர்ந்து நான்கு பேருடன் மது அருந்தியிருக்கிறார். அப்போது ஹரிகிருஷ்ணன், `நம்மில் ஒருவன் இல்லைன்னா என்ன செய்வீர்கள்' என்று போதையில் கேட்டிருக்கிறார். அதற்கு அங்கிருந்தவர்கள் 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?'என்று கேட்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை ஹரிகிருஷ்ணனுடன் அன்றைய தினம் மது அருந்தியவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

ஹரிகிருஷ்ணனின் அறை முழுவதும் தேடிப் பார்த்தபோது எந்தவிதத் தடயமும் இல்லை. நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹரிகிருஷ்ணனிடம் `எதற்கு இப்படி நடந்து கொள்கிறாய்?’ என்று குடும்பத்தினர் கேட்டிருக்கிறார்கள். அதன் பிறகு அறைக்குள் சென்றவர் மஞ்சள் நிறப் புடவையில் தூக்கில் தொங்கியிருக்கிறார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

வேதாச்சலம்
வேதாச்சலம்
சென்னை:`என் மனைவி அசிங்கப்படுத்திவிட்டாள்!' -  தம்பியைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்

வேதாச்சலத்தின் ஆதரவாளர்களிடம் கேட்டதற்கு, ``ஹரிகிருஷ்ணன் வேலைக்கு எதுவும் செல்லாததால், குடும்பச் செலவுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வீட்டிலுள்ளவர்கள் கொடுத்துவிடுவார்கள். அதை வைத்துத்தான் ஹரிகிருஷ்ணன் மது அருந்தி, தன்னுடைய விருப்பம்போல வாழ்ந்துவந்தார். பல தடவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. ஹரிகிருஷ்ணனின் மாமியார், முன்னாள் கவுன்சிலராக இருந்தவர்" என்றனர்.

ஹரிகிருஷ்ணனின் தற்கொலைத் தகவல் வெளியானதும் வேதாச்சலத்தை போனில் தொடர்புகொண்டு அவரின் ஆதரவாளர்கள் ஆறுதல் கூறியிருக்கிறார்கள். சம்பவம் நடந்ததும் வீட்டுக்குச் சென்ற போலீஸாரிடம், `உங்களுடைய கடமையைச் செய்யுங்கள்' என்று கூறிவிட்டு வேதாச்சலம் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு