Published:Updated:

`டெலிவரி பாயின் பேச்சு அநாகரிகமாக இருந்தது!' -பீட்சா ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

காயத்ரி சாய்நாத்
காயத்ரி சாய்நாத்

பீட்சா ஆர்டர் செய்தவரின் செல்போன் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்த டெலிவரி ஊழியரால், தொடர்ச்சியாக போன் கால்கள் வந்ததால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் பேஷன் டிசைனர் காயத்ரி.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் காயத்ரி சாய்நாத். இவர், மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தற்போது பேஷன் டிசைனராக உள்ளார். இவர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `மோகன சுந்தரம் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறிய தகவல்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகனசுந்தரத்திடம் விசாரித்தபோது, பரமேஸ்வரன் என்பவர் என் செல்போன் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தது தெரியவந்தது.

காயத்ரி  சாய்நாத்
காயத்ரி சாய்நாத்

என் செல்போன் நம்பருக்கு சக்திவேல், மகேஷ்குமார், சுந்தரம் சந்திரபோஸ் ஆகியோர் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்தனர். அவர்கள் என்னிடம் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்துடன் இணைத்துள்ளேன். தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, புகார் மனு ஏற்புச் சான்றிதழ் வழங்கியதோடு விசாரணை நடத்திவருகிறார்.

இதுதொடர்பாக காயத்ரி சாய்நாத், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதற்கு ஏராளமானவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

காயத்ரி சாய்நாத்திடம் பேசினோம்.

``கடந்த 9-ம் தேதி டோமினோஸ் நிறுவனத்தில் ஆன்லைனில் பீட்சாவை ஆர்டர் செய்திருந்தேன். அப்போது டெலிவரி பாய், தொடர்ந்து என் நம்பருக்கு போன் செய்துகொண்டே இருந்தார். எனக்கு அட்ரஸ் தெரியவில்லை என்று கூறினார். அவரின் பேச்சு அநாகரிகமாக இருந்தது. அதனால் எனக்குக் கோபம் வந்தது.

நடிகை காயத்ரியின் டூவிட்
நடிகை காயத்ரியின் டூவிட்

போனில் அந்த டெலிவரிபாய், உங்களுக்கு பீட்சா வேண்டுமா, இல்லை என்றால் எடுத்துவிட்டுச் செல்லட்டுமா என்று கேட்டார். உடனே டெலிவரி பாயின் பேச்சுக்குப்பிறகு அவரின் போட்டோவை எடுத்து வைத்தேன். அதன்பிறகு என் செல்போன் நம்பருக்குத் தொடர்ந்து போன் கால்கள் வந்தன. அதில் பேசியவர்கள் என்னிடம் அசிங்கமாகப் பேசினார்கள். பின்னர் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக மெசேஜ் செய்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என்னிடம் போனில் பேசியவர்களிடம் என்னுடைய நம்பரை யார் கொடுத்தது என்று கேட்டேன். அதற்கு எங்களுடைய காலேஜ் வாட்ஸ்அப் குரூப்பில் நம்பர் வந்தது என்று கூறினர். அதில் சிலர் என்னிடம் மன்னிப்பும் கேட்டனர்.

இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். உடனடியாக போலீஸாரும் நடவடிக்கை எடுத்தனர். என்னிடம் அசிங்கமாகப் பேசியவர்களை போலீஸார் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். நான் அங்கு சென்றபோது பீட்சா டெலிவரி செய்த நபர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர்தான் என்னுடைய செல்போன் நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்ததாக போலீஸார் கூறினர். உடனடியாக டோமினோஸ் மேலாளர் சுரேஷ் அங்கு வந்தார். அவரிடம் நான், சில கேள்விகளைக் கேட்டேன். அதற்கு சுரேஷ், எங்களால் பரமேஸ்வரனை வேலையிலிருந்து நீக்க மட்டும்தான் முடியும் என்று பதிலளித்தனர்.

டெலிவரிபாய்
டெலிவரிபாய்

இன்றைய சூழலில் ஆன்லைனில்தான் பலர் ஆர்டர் செய்கின்றனர். அப்போது நம்முடைய செல்போன் நம்பரையும் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறோம். அந்த செல்போன் நம்பரை பொதுவழியில் தவறாகப் பயன்படுத்தினால் என்ன நியாயம். அதனால்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். மேலும் சமூக வலைதளத்திலும் என்னுடைய கருத்தைப் பதிவு செய்தேன். தவறாகப் பேசியவர்களை போலீஸார் சிறையில் அடைக்க வேண்டும். இந்தச் சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``காயத்ரி சாய்நாத் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. அவரிடம் தவறாகப் பேசியவர்களிடம் விசாரித்தபோது அனைவரும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட டோமினோஸ் நிறுவனம் சார்பிலும் சில தகவல்களை எங்களிடம் கூறியுள்ளனர்" என்றனர்.

`டெலிவரி பாயின் பேச்சு அநாகரிகமாக இருந்தது!' -பீட்சா ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

இதுகுறித்து டோமினோஸ் நிறுவனத்தில் அதிகாரி சுரேசிடம் கேட்டதற்கு, ``இந்தப் புகார் தொடர்பாக எங்கள் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த அதிகாரிகளை உங்களிடம் பேசச் சொல்கிறேன்" என்றார்.

காயத்ரி சாய்நாத்தின் செல்போன் நம்பர், உடனடியாக சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்த டெலிவரிபாய், `ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள்' என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு