சென்னை: `சீல் வைக்கப்பட்ட கட்டடம்; 7 வது மாடி!’ - டீ விற்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

ஹவுஸ் ஓனரின் பேராசையால்தான் என் மகனை இழந்துவிட்டேன் என்று டீ விற்கும்போது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவனின் தந்தை கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் ஹசனின் மகன் ரியாஸ் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்ப படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஜாகிர்ஹசனுக்கு வருமானம் இல்லை. அதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டார். குடும்பத்துக்கு உதவ டீ விற்ற ரியாஸ், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ரியாஸின் தந்தை ஜாகிர் ஹசன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் கடந்த 30 ஆண்டுகளாக டிரைவராகப் பணியாற்றி வருகிறேன். என் மூத்த மகன் ரியாஸ் (15).

ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்து வந்ததையறிந்த ரியாஸ், அவரின் தாயாரிடம் அம்மா வீட்டில் டீ போட்டு தாருங்கள். அதை நான் பிளாஸ்க்கில் வைத்து விற்பனை செய்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 40 நாள்களாக டீ விற்றுவந்துள்ளான். இதையறிந்த நான் படிக்கிற வயதில் நீ டீ விற்க வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவன், `பரவாயில்லை பள்ளிக்கூடம் திறக்கும் வரை நான் உங்களுக்கு உதவுகிறேன்' என்று கூறி டீ விற்று வந்துள்ளான்.
20-ம் தேதி மதியம் என் மகனுக்கு போன் செய்து ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டேன். அதற்கு என் மகன், `இப்போது வந்துவிடுகிறேன்' என்று கூறினான். பிறகு சுமார் 4 மணியளவில் எனக்கு போன் வந்தது. உங்களுடைய மூத்த மகன் ரியாஸ், அரமணைக்காரத் தெருவில் உள்ள 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டான் என்று கூறினர். உடனே நான் அங்கு சென்றேன். நான் அங்கு செல்வதற்குள் 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக்குழுவினர், என் மகனை பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டதாகக் கூறி சென்றுவிட்டனர்.

இதுசம்பந்தமாக விசாரிக்கும்போது என்னுடைய மகன் ரியாஸ், வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது, மேலாளர் அலி அவர்களுக்கு 7-வது மாடிக்குச் சென்று டீ கொடுத்துள்ளான். பிறகு அவன் கீழே இறங்கி வரும்போதுதான் ஆறாவது மாடியில் உள்ள படிக்கட்டு அருகில் உள்ள லிஃப்ட்தளம் எந்தவித தடுப்பும் இல்லாமல்இருந்ததால் கால் தவறி விழுந்துள்ளார். இதை போலீஸாரிடம் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். வீட்டின் உரிமையாளர், தான் 7-வது மாடியில் இருப்பதாகவும் டீ எடுத்துக் கொண்டு வரும்படி என் மகன் ரியாஸிடம் போனில் கூறியுள்ளார்.
அதனால்தான் டீயை எடுத்துக்கொண்டு ரியாஸ் 7-வது மாடிக்குச் சென்றுள்ளான். இந்த வீட்டின் உரிமையாளர் சட்டத்துக்கு புறம்பாக வீடு கட்டியுள்ளார். ஏற்கெனவே இவரது கட்டடத்துக்கு அனுமதியின்றி 7 மாடி கட்டியதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் பேராசைக்கும் அலட்சிய போக்குக்கும் என் மகனை இழந்தது கடைசியாக இருக்கக்கட்டும். என் மகனின் இழப்பு ஈடுகொடுக்க முடியாத பேரழிப்பு என்பதை இந்தப் புகார் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என் மகன் இறப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீஸார் கூறுகையில், ``மாணவன் ரியாஸ் மரணம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 304(A) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்தக் கட்டடம் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவன் ரியாஸின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றனர்.