Published:Updated:

`சென்னை ரிஸ்க்; காட்பாடி ஈஸி!” - தென்கொரிய சிகரெட் பாக்கெட்டுகளுடன் சிக்கிய சென்னைக் கும்பல்

ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான தென்கொரியா சிகரெட்டுகள் காட்பாடியில் சிக்கின. இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

தென்கொரியா சிகரெட்டுகள்
தென்கொரியா சிகரெட்டுகள்

அசாம் மாநிலம், கவுஹாத்தியிலிருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், 16-ம் தேதி மதியம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில், 1 -வது நடைமேடையில் வந்து நின்றது. ரயிலிலிருந்து இறங்கிய 3 பயணிகள் சந்தேகப்படும் வகையில், 13 பெரிய ‘டூரிஸ்ட்’ பேக்குகளை வேக வேகமாக இறக்கினர்.

தென்கொரியா சிகரெட் இருந்த டூரிஸ்ட் பேக்குகள்
தென்கொரியா சிகரெட் இருந்த டூரிஸ்ட் பேக்குகள்

அவர்களிடம் ஒரு விதமான பதற்றமும் அச்சமும் தெரிந்தன. இவற்றைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் (ஆர்.பி.எஃப்) அருகில் சென்று விசாரித்தபோதும், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீஸார் உடனே அவர்களிடமிருந்த பேக்குகளை சோதனை செய்யத் திறந்துபார்த்தனர்.

அதில், தென்கொரியா நாட்டுடைய சிகரெட்டுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். உரிய அனுமதியில்லாமல் இந்த சிகரெட்டுகளை மூன்று பேரும் கடத்திவந்துள்ளனர். விசாரணையில், அவர்கள் சென்னை ராயபுரம் முல்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் (30), பாலமுருகன் (28), சுப்பிரமணி (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கடத்தல் கும்பல்
கடத்தல் கும்பல்

தென்கொரியாவிலிருந்து நேபாளம் வழியாக அசாம் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகளை இந்த மூன்று பேரும் குறைந்த விலையில் பேரம் பேசி வாங்கியிருக்கிறார்கள். சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவந்து விற்பனை செய்யத் திட்டமிட்டனர். சென்னையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் அங்கு இறங்கவில்லை.

காட்பாடிக்கு வந்து கார் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல, திட்டத்தை மாற்றி அமைத்தனர். எனினும், போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர். ஒரு பாக்கெட் சிகரெட் விலை மூன்றாயிரம் ரூபாய். நம் ஊரில் கிடைக்கும் சிகரெட்டை விட உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது எனக் காவல் துறையினர் கூறுகின்றனர்.

தென்கொரியா சிகரெட்டுகள்
தென்கொரியா சிகரெட்டுகள்

டூரிஸ்ட் பேக்குகளில் இருந்த மொத்த சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், அவற்றை வேலூர் வணிகவரிச் செயலாக்க அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.