
சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய மாணவி, திடீரென தற்கொலை செய்துகொண்டார். காதலன் மரணத்தால் நேர்ந்த சோகமே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். ரம்யாவின் சொந்த ஊர் ஆரணி. அதனால், சென்னையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். இந்தச் சூழலில் சொந்த ஊருக்குச் சென்று வந்த ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மாணவி ரம்யாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட மாணவி ரம்யா குறித்து அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். மேலும், அவரின் செல்போனையும் ஆய்வு செய்தோம். அப்போது மாணவிக்கு சொந்த ஊரில் இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருடன் அடிக்கடி ரம்யா பேசி வந்திருக்கிறார்.
இந்தச் சமயத்தில் அந்த இளைஞர், கடந்த 10 நாள்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தகவல் கிடைத்ததும் மாணவி ரம்யா சொந்த ஊருக்குச் சென்றார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மாணவி ரம்யா, சோகத்துடன் சென்னை திரும்பி வந்திருக்கிறார். அதன் பிறகுதான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.