Published:Updated:

சென்னை: விருப்பமில்லாத திருமணம்; விபரீத முடிவை எடுத்த இளம்பெண்! - வீடியோவால் வெளியான கசப்பான சம்பவம்

இளம்பெண் ரக்‌ஷணா
இளம்பெண் ரக்‌ஷணா

சென்னை திருவேற்காடு பகுதியில் விருப்பமில்லாதவரைத் திருமணம் செய்துகொண்டதால் 23-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை அடுத்த திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி கொடுங்கையூரைச் சேர்ந்த ரக்‌ஷணா (21) என்பவருடன் ஜெயராமனுக்கு திருமணம் நடந்தது. கடந்த 19-ம் தேதி ஜெயராமன் வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். ரக்‌ஷணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

ரக்‌ஷணா, ஜெயராமன்
ரக்‌ஷணா, ஜெயராமன்

வேலை முடிந்து ஜெயராமனின் அம்மா வசந்தா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் வசந்தா கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, ரக்‌ஷணா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வசந்தா அதிர்ச்சியடைந்தார்.

உடனே ரக்‌ஷணாவை மீட்டு முதலுதவி செய்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து திருவேற்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ரக்‌ஷணாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரக்‌ஷணாவின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோதுதான் அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோ போலீஸாரிடம் சிக்கியது. அதில் அவர் தன்னுடைய இந்த முடிவுக்கான காரணத்தை கண்ணீர்மல்க வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ரக்‌ஷணாவுக்குத் திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்துவருகிறது.

ரக்‌ஷணா, ஜெயராமன்
ரக்‌ஷணா, ஜெயராமன்

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ரக்‌ஷணா பேசிய வீடியோவில், `` ஹாய் டாடி, நீங்கள் நினைச்சிட்டு இருக்கீங்க, திருமணத்துக்கு நான் பிடிச்சு ஒத்துகிட்டேன் என்று. அது உண்மையில்ல. அன்னிக்கு நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தீங்க. அதனால்தான் பிடிச்சுருக்குன்னு சொன்னேன். ஆனா, எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. பிடிக்காத வாழ்க்கைதான், ஆனாலும் சந்தோஷமாக ஏத்துக்கிட்டேன். எனக்கு பிடிக்காதுனு எல்லாருக்கும் தெரியும். எனக்குப் பிடிச்சது எது, பிடிக்காதது எதுனு உங்களுக்குத் தெரியும்.

இப்போகூட உங்களையெல்லாம் பார்க்கணும்னு தோணுது. பாப்பாவையும் தம்பியையும் நல்லா பார்த்துக்கோங்க. தம்பிக்கு நிறைய விஷயம் பிடிக்கும். ஆனா, அதை உங்ககிட்ட சொல்ல பயப்படுவான். தம்பி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். நான் ரொம்பவே மிஸ் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இவங்களை ஏத்துக்கவே தோண மாட்டேங்குது எனக்குக் கஷ்டமா இருக்குது... கத்தி அழக்கூட முடியலை டாடி... என் மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியலை" என்பதோடு வீடியோ முடிவடைகிறது.

ரக்‌ஷணா
ரக்‌ஷணா

ரக்‌ஷணாவின் அம்மா உஷா, திருவேற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `எனது கணவர் சம்பத், டிரைவராக வேலை பார்த்துவருகிறார். எங்களது மூத்த மகள் ரக்‌ஷணாவை, திருவேற்காட்டைச் சேர்ந்த ஜெயராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 10.12.2020-ல் புதுமணத் தம்பதியரை திருவேற்காடு வீட்டில் விட்டுவிட்டுச் சென்றோம். 19.12.2020-ம் தேதி ரக்‌ஷணா எங்களிடம் நல்லமுறையில் பேசினார். ஆனால், அன்றைய தினம் மாலை 6:30 மணியளவில் ரக்‌ஷணா இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. திருவேற்காட்டுக்குச் சென்று பார்த்தபோது படுக்கையில் ரக்‌ஷணா இறந்தநிலையில் காணப்பட்டாள். துப்பட்டாவால் தூக்குப் போட்டுக்கொண்டதாகக் கூறினார்கள். இறப்பு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரக்‌ஷணா தற்கொலை செய்துகொள்வதற்கு முன் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு