Published:Updated:

சென்னை: ஃபேஸ்புக் பழக்கம்; பாலியல் தொல்லை; வீடியோ டார்ச்சர்! - போலீஸை அதிரவைத்த புகார்

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காதலிக்கு, காதலன் தாலி கட்டியிருக்கிறார். அதன் பிறகு காதலனின் சுயரூபம் தெரிந்த அந்தப் பெண், வீடியோ ஆதாரங்களுடன் கண்ணீர்மல்க காவல் நிலையப் படியேறியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண், கண்ணீர்மல்க வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது,

``கடந்த 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் லவ்லி கணேஷ் என்கிற கணேஷ் (22) என்பவர் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு இருவரும் காதலித்தோம். 5.12.2020-ல் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில்வைத்து எனக்கு கணேஷ் தாலிகட்டி, திருமணம் செய்துகொண்டார். எனது பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்துகொண்டதால் எனது பெற்றோர், என் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், நான் எனது கணவர் கணேஷுடன் வாழப்போவதாகக் கூறிவிட்டு அவருடன் சென்று விட்டேன்.

கணேஷ்
கணேஷ்

அதன் பிறகு நான் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயின், அரை சவரன் மோதிரத்தை அடகுவைத்து முன் பணம் செலுத்தி 23.12.2020-ல் வில்லிவாக்கம் ரயில் நிலையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேறினோம். அன்று இரவே எனக்குத் துணையாகவும், வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தன்னுடைய தோழி என்று கணேஷ் எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அந்தச் சிறுமியையும் அதே வீட்டில் தங்கவைத்தார்.

ஓரிரு நாள்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து சந்தேகம் ஏற்பட்டு, நான் எனது கணவரிடம் கேட்டபோது, எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார். ஆபாச வார்த்தைகளால் திட்டியும், `என்னை இது சம்பந்தமாக இனி எதுவும் கேட்கக் கூடாது. மீறிக் கேட்டால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டி வீட்டிலிருந்த அறைக்குள்வைத்து பூட்டிவிட்டுச் சென்றார். எனது இரு கைகளைக் கட்டியும், வாயைத் துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் டார்ச்சர் செய்தார். இந்தச் சம்பவத்தால் எனக்கு உடல்ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டன. ஆகவே நான், `எனது வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று கதறி அழுதேன்.

கணேஷ்
கணேஷ்

அப்போது என்னிடம் சமாதானம் பேசுவதுபோல் ஆசைவார்த்தை கூறி என்னை மது அருந்த கணேஷ் வற்புறுத்தினார். அவரது வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பிறகு 17 வயது சிறுமி எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து, அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தார். எனது கணவரின் நண்பர்கள் என்று நான்கு பேரை (பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து, என்னிடம் கூட்டுப் பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் கத்திக் கூச்சலிட்டு அழுத காரணத்தால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டிப் போட்டு, வாயை துணியால் பொத்திக் கடுமையாகச் சித்ரவதை செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்பு கணேஷ் என்னிடம், தான் ஏற்கெனவே திருணமானவன் என்றும், தனக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியதோடு விவாகரத்து பெற்றுவிட்டதாகத் தான் கூறியது பொய் என்று கூறினார். மேலும், `நீ என்னுடைய 11-வது மனைவி’ என்றார். அது மட்டுமல்லாமல் என்னைப் படம் பிடித்ததுபோல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க வீடியோக்களை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். பின்னர் நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியதால், அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறினேன். எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னை: மின்சார ரயிலில் மயக்கம்; பாலியல் வன்கொடுமை! - பெண்ணுக்கு ரயில்வே ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்
வழக்கறிஞர் விஜயகுமார்
வழக்கறிஞர் விஜயகுமார்

இதற்கிடையில் 17 வயது சிறுமியும் கணேஷுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இளம்பெண் மற்றும் சிறுமி அளித்த புகாரின் பேரில் கணேஷிடம் வில்லிவாக்கம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து இளம்பெண்ணின் வழக்கறிஞர் விஜயகுமார் நம்மிடம், ``ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கணேஷ், பெண்களிடம் பழகியிருக்கிறார். பிறகு அந்தப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதைப்போல நடித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதோடு பெண்களை வீடியோவும் எடுத்து மிரட்டியிருக்கிறார். பொள்ளாச்சி சம்பவத்தைவிட சென்னையில் இந்தக் கொடுமை பெண்களுக்கு நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும் சிறுமியையும் காதலிப்பதுபோல நடித்து ஒரே வீட்டில் தங்கவைத்திருக்கிறார். அதில் இளம்பெண்ணை பூட்டிய அறைக்குள் சிறைவைத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார் கணேஷ். ஒரு கட்டத்தில் சிறுமி உதவியோடும், வீட்டின் உரிமையாளரின் உதவியோடும் தப்பிய இளம்பெண், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேஷின் செல்போனிலிருக்கும் வீடியோக்களிலிருக்கும் பெண்களிடம் போலீஸார் விசாரித்தால் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு