Published:Updated:

`கம்ப்ளெயின்ட் கொடுக்கப்போனா கழிவறையைக் கழுவ வெச்சாங்க!' - பாலியல் புகாரில் நடந்தது என்ன?

Representational Image
News
Representational Image

வைரலாகி வரும் அந்தச் செய்தியின் பின்னணியில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்வதற்காக அந்த 13 வயதுச் சிறுமியின் அம்மாவிடமும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடமும் பேசினோம்.

இதுவொரு போக்ஸோ வழக்கு தொடர்பான செய்தி என்பதால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி சம்பந்தப்பட்ட குடும்பத்தின் சகல அடையாளங்களும் மறைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அவர் இந்தச் சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்

- ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கரூர் மாணவி தற்கொலை செய்துகொண்டபோது, தமிழக முதல்வர் சொல்லிய வார்த்தைகள் இவை.

முதல்வர் இப்படிப் பேசியுள்ள இதே நேரத்தில்தான் பாலியல் தொல்லைக்குள்ளான இன்னொரு சிறுமி பற்றிய செய்திகள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.

Stop Abuse
Stop Abuse

``என் 13 வயது மகளுக்கு, என்னுடைய இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாகத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என் கணவரைக் கைது செய்து விசாரிக்கவில்லை. விசாரணை நடத்த என்னிடம் பணம் கேட்டார்கள். நான் இல்லையென்றதால் காவல் நிலையத்தின் கழிவறையை 3 நாள்கள் சுத்தம் செய்ய வைத்தார்கள். இதற்கிடையில் என் மகள் 1098-க்கு போன் செய்து `என் டாடியை கைது பண்ணுங்க. அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்' என்று புகார் செய்துவிட்டாள். என் கணவரைக் கைது செய்யுங்கள். எனக்கு நியாயம் வேண்டும்." - இப்படி வலம் வரும் அந்தச் செய்தியின் பின்னணியில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்வதற்காக அந்த 13 வயது சிறுமியின் அம்மாவிடமும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடமும் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``என் பேரு --- (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது). என் மொத கணவரைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு பெண் ஒன்று, ஆண் ஒன்றுன்னு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. கணவருக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே ஆஸ்துமா பிரச்னை இருந்திருக்கு. அது எனக்குத் தெரியாது. ஒருகட்டத்துல சிகிச்சைப் பலனில்லாம இறந்துட்டார். பிறந்த வீட்ல இருந்தபடியே ஐஸ்க்ரீம் கடை வேலை, எக்ஸ்போர்ட் கம்பெனி வேலை, தையல் வேலைன்னு கடுமையா உழைச்சு என் குழந்தைகளைப் படிக்க வெச்சுக்கிட்டிருந்தேன். அப்போதான், பிள்ளைகளோட பள்ளிக்கூட வேன் டிரைவரோட நட்பு ஏற்பட்டு, காதலாச்சு. அவரோட குடும்பத்துக்கும் எங்களோட உறவைப் பத்தி நல்லா தெரியும்.

sexual abuse
sexual abuse

பிள்ளைகளுக்காக வீட்டை பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல மாத்திக்கிட்டேன். அப்போ, இவரு அடிக்கடி என் வீட்டுக்கு வந்துபோறது பள்ளிக்கூட நிர்வாகத்துக்குத் தெரிஞ்சுபோச்சு. அதனால, அவரை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. அதைத் தொடர்ந்து அவர் சொன்னபடி, பிள்ளைங்களையும் அந்தப் பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்தி வேற பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டேன். இந்த நேரத்துல நான் கர்ப்பமாகிட்டேன். கல்யாணம் நடந்தேதான் ஆகணும்னு நான் சொன்னதால, வீட்டுக்குள்ள வைச்சே மெட்டி போட்டு, தாலி கட்டினார். இன்னொரு ஆண் குழந்தை பொறந்தான். இதுக்கெல்லாம் நடுவுல அவர் கேட்டப்போ எல்லாம் என்னோட நகைகள், சேமிப்புன்னு எல்லாத்தையும் கொடுத்தேன். போதாக்குறைக்கு என் பிறந்த வீட்ல கடன் வாங்கியும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் செலவு பண்ணேன். இந்த நேரத்துலதான் ஒருநாள், இவரு ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனார். ஒருநாள் வழக்கம்போல இவருக்கு போன் பண்ணேன். போனை எடுத்துப் பேசினவங்க ஒரு லேடி. நான் ...............ரோட மனைவி பேசுறேன்னு என்கிட்டேயே சொன்னாங்க அந்த லேடி. இப்படி ஏமாந்துப்போயிட்டோமேன்னு மனசு நொந்துபோய் அரளி விதையை அரைச்சு சாப்பிட்டுட்டேன். அம்மா பார்த்துட்டதால காப்பாத்திட்டாங்க. அப்போதான் என் பொண்ணு, `டாடி மோசமான ஆளும்மா. என்னையே பேட் டச் பண்ணியிருக்காரு. `இதை உன் அம்மாகிட்ட சொன்னா, உங்கம்மாவை விட்டுவிட்டு நான் போயிடுவேன்'னு மிரட்டினாரும்மா. அவருக்காக சாகப் பார்த்தியேம்மா'ன்னு அழுதுகிட்டே சொன்னா. நான் பதறிப்போயி என்ன நடந்துச்சும்மான்னு கேட்டேன்'' என்றவர், அழுதபடியே தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்க ஏரியாவுல ஒரு நீர்நிலை இருக்கு. நாங்க குடும்பமா அங்கே போயி துணி துவைச்சு, குளிச்சிட்டு வருவோம். நான் கூட போகாத நாள்கள்ல அவர் மட்டும் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டுப் போவார். அந்த நேரத்துலதான் சோப்புப் போடுறேன்னு பொண்ணை பேட் டச் பண்ணியிருக்கார். விஷயம் தெரிஞ்சதும் என்னால தாங்கிக்க முடியலை. எனக்குத் தெரிஞ்ச லாயர் அண்ணன் ஒருத்தர் மூலமா, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். வழக்கைப் பதிவு செஞ்சுக்கிட்டவங்க அந்த ஆளைப்புடிச்சு விசாரிக்கவே இல்லை. என்கிட்ட 5,000 ரூபா காசு கேட்டாங்க. என்கிட்ட இல்லைன்னு சொன்னேன். அந்த லாயர் அண்ணன்கிட்டேயும் பணம் கேட்ட விஷயத்தைச் சொன்னேன். `காசு கேட்கிறதுக்கு அவங்களுக்கு உரிமையில்லை'ன்னு சொன்னார். அதுக்கப்புறம், நான் வேலையில்லாம இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டவங்க `போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்க்கிறியா'ன்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு செப்டம்பர் மாசம் ஒண்ணாம் தேதியிருந்து வேலைபார்க்க ஆரம்பிச்சேன். நாலாம் தேதி இந்த விஷயம் என் வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு. இதுக்கு நடுவுல `நீ ஏதாவது சேனல்ல புகார் கொடுத்தியா. நியூஸ் வந்திருக்கு. நீ நாளையில இருந்து வேலைக்கு வர வேணாம்'னு சொல்லிட்டாங்க. அஞ்சாம் தேதியில இருந்து நான் வேலைக்குப் போகல. 6-ம் தேதி கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்து, நடந்த விஷயத்தையெல்லாம் சொல்லி அந்த ஆளைக் கைது பண்ணச் சொல்லிக் கேட்டேன். அதுக்கப்புறம் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆபீஸ்ல கூப்பிட்டு, `அவனை பிடிச்சிடுறதா' தைரியம் சொன்னாங்க.

Jail (Representational Image)
Jail (Representational Image)
Photo by Tim Hüfner on Unsplash

அந்தாளு ஓலா கார் ஓட்டிக்கிட்டு இருந்ததால, கார் புக் பண்ற மாதிரி வரவழைச்சுப் பிடிச்சிடலாம்னு சொன்னாங்க. வக்கீல் அண்ணாவும் நானும் அப்படியும் முயற்சி செஞ்சோம். வரேன்னு சொல்வான். ஆனா, கடைசியில வரமாட்டான். அப்புறம், அந்தாளோட போன் நம்பர் சிக்னலை வெச்சு இடத்தை சொன்னாங்க போலீஸ்காரங்க. என் தம்பிகூட அந்த ஏரியாவைச் சுத்தி சுத்தி வந்தேன். நேரங்காலம் பார்க்காம பல நாள் சுத்தினோம். அவன் கிடைக்கலை. கடைசியா அவன் வேலைபார்த்த ஆபீஸ்க்கே போய் விஷயத்தைச் சொல்லி, அவன் வண்டியே எடுக்க முடியாதபடி பண்ணிட்டோம். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் என் பொண்ணைக் கூப்பிட்டு ஜட்ஜ் பேசினாங்க. இவ்வளவு செஞ்சும், இன்னிக்கு வரைக்கும் அவனைக் கைது பண்ணலை. அந்தாளு என்னை வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டுறாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க'' என்றவர் மறுபடியும் அழ ஆரம்பித்தார்.

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடம் பேசியபோது, ``இது போக்ஸோ வழக்குங்க. அவங்க மீடியா, யூடியூப், ஃபேஸ்புக்குன்னு எல்லாத்துலேயும் பேசிக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட நபரும் பார்த்துக்கிட்டிருந்தா, அவர் எப்படி வெளியே வருவார். இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை ஒரு குழு அமைச்சிருக்கு. எப்படியும் ரெண்டு, மூணு நாள்ல அவங்களோட கணவரைக் கண்டுபிடிச்சிருவாங்க. மத்தபடி, அவங்க சொன்ன மாதிரி காவல் நிலையத்தோட கழிவறையையெல்லாம் கழுவ வைக்கலைங்க'' என்றார்.

காவல்துறை
காவல்துறை

இந்நிலையில், இன்று காலை தாம்பரத்தில் பதுங்கியிருந்த அந்த நபரை, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.

இந்த விஷயத்தில், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே நம்முடைய நோக்கம்.