Published:Updated:

` நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற சிறுமி' - சென்னையில் இளைஞரால் நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீடு
கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீடு

சிறுமி காணாமல்போன தகவல் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களும் தேடினர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 10-வயது சிறுமி, பெற்றோருடன் குடியிருந்தார். அவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று நள்ளிரவில், கழிவறை செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியில் வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. திடீரெனக் கண்விழித்த பெற்றோர், சிறுமியைத் தேடினர்.

ஆனால், சிறுமி எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது, வீட்டின் பின்பகுதியில் காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிறுமியின் பெற்றோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியை மீட்ட போலீஸார், அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து, சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் மரணம் குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமி இரவு 11.30 மணிக்கு பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலையம்
மதுரவாயல் காவல் நிலையம்

சிறுமியின் காயங்களைப் பார்த்தபோது, மொட்டை மாடியிலிருந்து அவர் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்றுதான் முதலில் கருதினோம். ஆனால், பிரேதப் பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். ஆனால், அந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்து, சிறுமியை எங்களுடன் தேடியவர்களிடம் விசாரித்தோம். அப்போது, சிறுமியின் வீட்டு மாடியில் குடியிருக்கும் இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நபரிடம் விசாரித்தோம். அப்போது அவர், நள்ளிரவில் கழிவறைக்கு வந்த சிறுமியைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்றதும், பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற தகவலையும் தெரிவித்தார். இதையடுத்து, அந்த நபரைக் கைதுசெய்தோம். அவரின் பெயர் சுரேஷ் (29). சிறுமி சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்துள்ளார்.

சுரேஷ்
சுரேஷ்

அப்போது சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். அடுத்து, மொட்டை மாடியிலிருந்து சிறுமி தவறி விழுந்ததுபோல சுரேஷ், செட்அப் செய்துள்ளார். பிறகு சுரேஷ், தன்னுடைய அறைக்குச் சென்று தூங்கிவிட்டார். சில மணி நேரத்துக்குப் பிறகு, சிறுமியைப் பெற்றோர் தேடியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சுரேஷூம் சிறுமியைத் தேடுவதைப் போல நடித்துள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கிக்கொண்டார்" என்றனர்.

சுரேஷைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை வழக்கு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று சுரேஷ், தூங்காமல் இருந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போதுதான் தனியாக வெளியில் வந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு