Published:Updated:

`500 வீடியோக்கள்; 8 ஆண்டுகளாக செய்த தவறு!'- சிறார் வதை வீடியோ வழக்கில் சிக்கிய சென்னை பட்டதாரி

Arrest
Arrest

சென்னை அம்பத்தூரில் சிறார் வதை வீடியோக்களைப் பகிர்ந்த பார்த்த டியூஷன் டீச்சர் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் சிறார் வதை வீடியோவைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு அனுப்பிய தகவலின் அடிப்படையில் தமிழக போலீஸார் பட்டியலைத் தயாரித்தனர். திருச்சியில் அல்போன்ஸ் என்பவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தப் பிரிவின் ஏடிஜிபி ரவி தலைமையிலான போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில், அம்பத்தூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஹரீஷ் என்பவரை அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்
சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான ஹரீஷ் (24). அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2016-ல் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வேலை தேடிவருகிறார். இவரின் அம்மா டியூஷன் டீச்சராக உள்ளார். இந்த நிலையில் ஹரீஷ், 11-ம் வகுப்பு படிக்கும்போதே செல்போனில் சிறார் வதை வீடியோக்களைப் பார்த்துவந்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரித்தப் பிறகும் அந்த வீடியோக்களைத் தொடர்ந்து அவர் பார்த்துவந்துள்ளார்.

ஹரீஷ் பயன்படுத்திய செல்போன்கள், கம்ப்யூட்டரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிறார் வதை வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. அவரின் ஐ.பி முகவரியை வைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். சென்னையில் தயாரிக்கப்பட்ட பட்டியலிலும் அவரின் பெயர் இருந்தது. ஹரீஷிடம் விசாரித்தபோது அவர் முதலில் மறுத்தார். ஆனால், விசாரணைக்குப்பிறகு சிறார் வதை வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ததையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஹரீஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம்.

ஹரீஷ்
ஹரீஷ்

ஹரீஷ், கடந்த 8 ஆண்டுகளாக சிறார் வதை வீடியோக்களைப் பார்த்துவந்தது விசாரணையில் தெரிந்தது. திருச்சியில் கைதான அல்போன்ஸ் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஹரீஷைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்'' என்றனர்.

அம்பத்தூர் மகளிர் போலீஸார் ஹரீஷிடம் விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு எதற்காக விசாரிக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட பிறகுதான் ஹரீஷின் இந்த முகம் அவரின் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதிய அந்தக் குடும்பத்தினர், ஹரீஷை விட்டுவிடும்படி காவல் நிலையத்தில் கெஞ்சியுள்ளனர். ஆனால் போலீஸாரோ, எங்களால் எதுவும் செய்ய முடியாது. இது, கமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்த பட்டியல் என்று கூறியுள்ளனர்.

பின் செல்ல