Published:Updated:

‘ரவுடி காக்கா பாலாஜிக்கு ஸ்கெட்ச்; துப்பாக்கியாலும் சுட்டனர்’- சம்பவத்தை விவரிக்கும் வழக்கறிஞர்

சென்னை
சென்னை

சென்னை அண்ணா சாலையில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் தங்கராஜ் என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் மார்ச் 3-ம் தேதி மாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள காமராஜர் அரங்கத்தை அடுத்துள்ள கார் ஷோரூம் பகுதியில்தான் நாட்டுவெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த சென்னைக் காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

சென்னை காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாட்டுவெடிகுண்டுகளை வீசியது யார். யாரைக் குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டன என்பது குறித்து விசாரிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் அந்தப்பக்கமாகச் சென்ற சொகுசு காரின் மீது இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகத் தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இது உறுதியானது. இதையடுத்து சொகுசு காரின் பதிவெண் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்களைக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

`ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச்!' 
- அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய மாணவர்

போலீஸாரின் விசாரணையில் அந்த கார் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சி.டி. மணி என்பவருடையது என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை, கொல்லை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள நீதிமன்றத்தில் சி.டி.மணி வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்துள்ளார். இதையடுத்து காரில் திரும்பியபோது அவருடன் வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியும் இருந்துள்ளார். இவர்கள் சென்ற காரை நோக்கிதான் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

‘ரவுடி காக்கா பாலாஜிக்கு ஸ்கெட்ச்; துப்பாக்கியாலும் சுட்டனர்’- சம்பவத்தை விவரிக்கும் வழக்கறிஞர்

போலீஸார் கூறும்போது வடசென்னையில் காக்கா தோப்பு பாலாஜிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். அவரது எதிர்கோஷ்டியினர்தான் இவரை தீர்த்துக்கட்ட நாட்டுவெடிகுண்டு வீசியிருக்க வேண்டும் என்றனர். துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுள்ளனர். அவர்கள் பயணித்தது குண்டு துளைக்காத கார் என்பதால் அவர்களுக்கு எதும் பாதிப்பு ஏற்படவில்லை என்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தங்கராஜ் என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனுஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் மார்ச் 3-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்தும் விரிவாக அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ``மார்ச் 3-ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக பி.மணிகண்டன் என்பவருடன் மூத்த வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சென்றிருந்தோம். வழக்கு தொடர்பாக அவருடன் கலந்துரையாடிய பின் அங்கிருந்து புறப்பட்டோம்.

சி.டி.மணி
சி.டி.மணி

போகும் வழியில் என்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறக்கிவிடுமாறு கூறினேன். அவரது காரிலே புறப்படத் தயாரானோம். அப்போது மணிகண்டனின் நண்பர் காக்கா தோப்பு பாலாஜி என்பவர் ஒரு வழக்கு விசாரணைக்காக அங்கே வந்திருந்தார். இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். தன்னை கிண்டியில் இறக்கிவிடுமாறு பாலாஜி கேட்டுக்கொண்டார். இதையடுத்து கார் சைதாப்பேட்டையை நோக்கிப் புறப்பட்டது.

மாலை 4 மணிக்கு ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே எங்களது கார் நின்ற போது நீண்ட நேரமாக சிலர் எங்களை பின்தொடர்வதை உணர்ந்தேன். அந்த நபர்கள் சாம்போ செந்தில், பாண்டிச்சேரி பிரசன்னா மற்றும் நெப்போலியனின் கூட்டாளிகள் முன்விரோதம் காரணமாக என்னைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பின் தொடர்ந்து வருகின்றனர் எனக் காக்கா தோப்பு பாலாஜி தன் நண்பரான மணிகண்டனிடம் கூறினார். நாங்கள் பேசிக்கொண்டு வரும்போது கார் ஜெமினி மேம்பாலத்தை அடைந்திருந்தது. திடீரென சிலர் எங்களது வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசத்தொடங்கினர். பாலாஜி எங்களை தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு வண்டியைத் திருப்புமாறு கூறினார்.

தேனாம்பேட்டை காவல் நிலையம்
தேனாம்பேட்டை காவல் நிலையம்

இந்தச் சாலையில் யூ டர்ன் எடுக்க வேண்டும் என்றால் தி.மு.க அலுவலகம் வரை செல்லவேண்டும். அது மிகவும் தூரமாக இருந்தது. எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஜெமினி மேம்பாலத்தில் வண்டியை வலதுபுறமாகத் திருப்பி ராங்க் ரூட்டில் பயணித்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து எங்கள் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதையடுத்து காரை ஜி.என்.செட்டி லிங்க் ரோடு வழியாகத் திருப்பினோம். இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் துரத்திக்கொண்டே வந்தனர். இறுதியாக நாங்கள் ஆலையம்மன் கோயில் அருகே வந்தபோதுதான் அந்தக் கும்பலிடமிருந்து தப்பினோம். அந்தக் கும்பலிடமிருந்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு