Published:Updated:

`சிறுமியின் வாக்குமூலம் மனசாட்சியை உலுக்கியது!' - தாய்க்குத் தண்டனை கொடுத்த நீதியரசர்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் போக்ஸோ சட்டம். ஆனால், இந்தச் சட்டத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Chennai High Court
Chennai High Court

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்- உமா தம்பதிக்குத் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷுக்கும் உமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மகள்கள் இருவரும், தந்தை சுரேஷுடன் உள்ளனர். தாய் உமா மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

Abuse
Abuse

இந்தநிலையில், அண்மையில் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்துக்குச் சென்ற உமா தன் கணவரைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் புகாரைத் தெரிவித்துள்ளார். அதில், ‘என் கணவர், என் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதை நேரில் பார்த்த நான் அவரைக் கடுமையாகக் கண்டித்தேன். பின்னர் என் மகள் கர்ப்பமடைந்துவிட்டாள். அந்த விஷயம் எனக்குத் தெரிந்ததும், மருந்து கொடுத்து நான் கருவைக் கலைத்து விட்டேன். இப்படி ஒரு காரியம் செய்த என் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

உமா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சுரேஷ். வழக்கின் விசாரணை முடிவதற்கு முன்னதாகவே சுரேஷ் ஜாமீன் பெற்றுவிட்டார். இதனிடையே குழந்தைகள் இருவரும் அரசுக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

Chennai High Court
Chennai High Court

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு இறுதித் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.

தீர்ப்பின் போது பேசிய அவர், ``மகளை, கணவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்ற இந்த வழக்கு மிகவும் துரதிஷ்டவசமானது. கணவரைப் பழிவாங்குவதற்காக மனைவி இப்படி ஒரு பொய்யான புகாரைத் தெரிவித்துள்ளார்.

Vikatan

சுரேஷ் தொடர்ந்த ஜாமீன் வழக்கு விசாரணையின்போது அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தாய் தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதனால்தான் சுரேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாது 11 வயதுச் சிறுமி எழும்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘ நானும் தங்கையும் அப்பாவுடன் இருப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. எங்களை அப்பாவிடமிருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச் செல்வதற்காகவே அம்மா இப்படி ஒரு பொய் கூறியுள்ளார். நானும் தங்கையும் அப்பாவுடனே இருக்க விரும்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Divorce
Divorce

ஆனாலும் சிறுமியின் வாக்குமூலத்தில் நம்பிக்கை இல்லாமல் அவரை நேரில் அழைத்து நடந்தது பற்றி நானும் விசாரித்தேன். குடும்ப நல நீதிமன்றத்தில் கூறியதைத்தான் சிறுமி என்னிடமும் கூறினார். சிறுமியின் வாக்குமூலம் என் மனசாட்சியை உலுக்கியது. கணவரைப் பழிவாங்குவதற்காகப் பெற்ற மகள் என்றும்பாராமல் அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டை முன்வைக்க, தாய்க்கு எப்படி மனது வந்தது எனத் தெரியவில்லை.

இந்த வழக்கு விசாரணையின்போது எனக்கு மற்றுமொரு தகவலும் தெரியவந்தது. சிலர் போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என முன்னதாக நீதிமன்றத்தினுள் பலர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் அப்போது நான் அதை நம்பவில்லை, இன்று நேரில் பார்த்துவிட்டேன். போக்ஸோ சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கு இந்த ஒரு வழக்கே சாட்சி. தந்தை சுரேஷ் மீதான போக்ஸோ சட்டம் இனி ஒரு நொடி கூட நீடிக்கக் கூடாது. மேலும் தன் மகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் சிறுமி மீது தவறான புகார் அளித்த உமாவுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

Verdict
Verdict

எனவே சுரேஷ் மீது தொடரப்பட்ட போக்ஸோ சட்டத்தை ரத்து செய்தும் கணவர் மற்றும் மகள் மீது பொய்ப் புகார் அளித்த உமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடுகிறேன். இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குக் கடும் எச்சரிக்கையாக இருக்கும்” எனக் கூறி வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி.