Published:Updated:

`திருமணமான நாளிலிருந்தே சந்தோஷமாக இருக்கல!’- சென்னையில் 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அஞ்சலி, அய்யனார்
அஞ்சலி, அய்யனார்

``அஞ்சலி ஊருக்குப் போக வேண்டும் என அடம் பிடித்தார். ஆத்திரத்தில் கழுத்தைப்பிடித்து நெரித்தேன். அவள் மயங்கியதும் ஓடிவிட்டேன்" என மனைவியைக் கொலை செய்த கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் பசும்பொன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (31). இவர் மாதவரத்தில் உள்ள நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அஞ்சலி (21). சேலத்தைச் சேர்ந்த இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் சென்னையில் தனிக்குடித்தனம் இருந்தனர்.

அஞ்சலி
அஞ்சலி

இந்த நிலையில் இன்று காலை அய்யனாரின் வீடு பூட்டியே இருந்தது. இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது படுக்கையில் அஞ்சலி மட்டும் படுத்திருந்தார். அவரை அழைத்தும் கண்விழிக்கவில்லை. இதனால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. வீட்டில் அய்யனார் இல்லை. அதனால் அய்யனார் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அஞ்சலியின் சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது யார் எனறு போலீஸார் விசாரித்தனர்.

அஞ்சலி, ஊருக்குச் செல்ல புறப்பட்டார். அதை நான் தடுத்தேன். இதனால் எனக்கும் அவளுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவளின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். அப்போது அவள் மயங்கினாள். அதன்பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.
அய்யனார்
அஞ்சலி, அய்யனார்
அஞ்சலி, அய்யனார்

இந்த நிலையில், போலீஸாரிடம் சிக்கிய அய்யனாரிடம் விசாரித்தபோது மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று இரவு மதுபோதையில் அய்யனார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவசரமாக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என அஞ்சலி கூறியுள்ளார். போதையிலிருந்த அய்யனார் மனைவி கூறியதை காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அஞ்சலியின் கழுத்தை நெரித்து அய்யனார் கொலை செய்துள்ளார்" என்றனர்.

போலீஸாரிடம் அய்யனார், ``அஞ்சலியின் உறவினர் ஊரில் இறந்துவிட்டார். அதற்குச் செல்ல வேண்டும் என என்னை அழைத்தார். திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே ஆவதால் ஊருக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. ஊருக்குச் செல்ல புறப்பட்டார். அதை நான் தடுத்தேன். இதனால் எனக்கும் அஞ்சலிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவளின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். அப்போது அவள் மயங்கினாள். அதனால் அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீஸார் என்னைப் பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார். இதையடுத்து, அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஞ்சலி
அஞ்சலி
`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை

இந்தக் கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்துவருகிறது. அஞ்சலி இறந்த தகவல் கிடைத்ததும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரின் உறவினர்கள் சென்றனர். அஞ்சலியின் சடலத்தைப் பார்த்த உறவினர்கள், ``உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா அவனுக்குத் திருமணம் செய்து வைத்தோம். திருமணமான நாளிலிருந்தே நீ சந்தோஷமாக இருக்கல. அவனுக்கு கட்டிக் கொடுத்துட்டு உன் சந்தோஷத்தை நாங்களே கெடுத்துவிட்டோமே" எனக் கதறி அழுதனர். அஞ்சலியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமணமான 4 மாதங்களில் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக அய்யனார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு