Published:Updated:

`தீபாவளி பட்டாசால் அலறல் சத்தம் கேட்கல' - நண்பனை விரட்டிவிட்டு ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் கொலை

தீபாவளித் தினத்தன்று நண்பர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய சென்னை ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் ஜானகிராமன்
ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் ஜானகிராமன்

சென்னை, வில்லிவாக்கம், ராஜமங்கலம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவர், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐ.சி.எப் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றினார். அ.தி.மு.க பிரமுகரான ஜானகிராமன், ஐசிஎஃப்-பின் அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும் இருந்தார். இது தவிர ராஜமங்கலத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலை நிர்வகிக்கும் முக்கிய பதவியிலும் இருந்தார்.

MURDER
MURDER

இந்தச் சமயத்தில் தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடிய ஜானகிராமன், பைக்கில் வெளியில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் கொளத்தூரிலிருந்து வீட்டுக்கு ஜானகிராமனும் அவருடைய நண்பர் தயாபரனும் பைக்கில் வந்தனர். கொளத்தூர் 31-வது தெரு, ஜி.கே.எம் காலனி பகுதியில் வந்தபோது இன்னொரு பைக்கில் வந்த கும்பல் வழிமறித்தது. பிறகு, ஜானகிராமன் வந்த பைக்கின் மீது அந்தக் கும்பல் மோதியது. இதனால் நிலைதடுமாறி ஜானகிராமனும் அவருடைய நண்பரும் கீழே விழுந்தனர்.

இந்தச் சமயத்தில் மழை பெய்ததால் அந்தப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. ஆனால், தீபாவளி பட்டாசு சத்தம் மட்டும் அதிகளவில் அந்தப் பகுதியில் கேட்டது. கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அந்தக் கும்பல் ஜானகிராமனை வெட்டியது. அதை அவருடைய நண்பர் தடுத்தார். இதனால் அவருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. ஒருகட்டத்தில் ஜானகிராமனின் நண்பரை மிரட்டிய கும்பல் அங்கிருந்து அவரை ஓட வைத்தது. இதையடுத்து ஜானகிராமனை குறி வைத்து அந்தக் கும்பல் வெட்டியது. குறிப்பாக, அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியிலேயே அதிகமாக வெட்டியது.

ICF
ICF

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜானகிராமன் உயிருக்குப் போராடினார். அவர் இறந்துவிட்டார் எனக் கருதிய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதன் பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த ஜானகிராமனின் நண்பர் கொடுத்த தகவலின்படி பெரவள்ளூர் போலீஸாரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸில் ஜானகிராமனை ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜானகிராமனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி ஜானகிராமன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜானகிராமன் பதவி வகித்த இளங்காளியம்மன் கோயிலில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

MURDER
MURDER

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``ஜானகிராமன் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், ஜானகிராமனுடன் வந்த அவரின் நண்பரிடமும் என்ன நடந்து என்று விசாரித்தபோது அவர், ``நானும் ஜானகிராமனும் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது திடீரென எங்களை வழிமறித்த கும்பல் அரிவாளால் வெட்டியது. நாங்கள் சத்தம் போட்டோம். ஆனால், பட்டாசு சத்தத்தால் எங்களின் அலறல் சத்தம் கேட்கவில்லை. அதற்குள் ஜானகிராமனை வெட்டிவிட்டு 3 பேர் பைக்கில் தப்பிவிட்டனர்" என்று கூறினார்.

அவர் அளித்த தகவலின்படி கொலையாளிகளைத் தேடிவருகிறோம். அ.தி.மு.க ஐசிஎஃப் தொழிற்சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் ஜானகிராமன் கொலைக்கு வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்று விசாரித்துவருகிறோம். விரைவில் கொலையாளிகளை கைது செய்துவிடுவோம்" என்றார்.

ரூ. 200 கோடி மதிப்புள்ள சொத்துக்காக 7 பேர் கொலை? - கேரளாவை உலுக்கும் வழக்கு!

கொலை செய்யப்பட்ட ஜானகிராமனுக்கு சசிகலா என்ற மனைவியும் தினேஷ்குமார், நந்தக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜானகிராமன் கொலை செய்யப்பட்ட தகவல் குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐசிஎஃப் ஊழியர்கள் மத்தியில் அன்பாகப் பழகக்கூடிய ஜானகிராமனுக்கு தீபாவளித் தினத்தன்று நடந்த கொடூரம் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.