Published:Updated:

`அரசு வேலை பறிபோனது; ஆளைத் தீர்த்துவிட்டேன்!'- ஐ.சி.எஃப் ஊழியரைக் கொலை செய்த பூசாரி

`என்னை வேலையிலிருந்து நீக்கியதற்கு ஜானகிராமன்தான் காரணம் என்று தெரிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தேன்' என்று கோயில் பூசாரி ஓம்பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓம்பிரகாஷ்
ஓம்பிரகாஷ்

சென்னை, வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவரின் மனைவி சசிகலா. இந்தத் தம்பதிக்கு தினேஷ்குமார், நந்தகுமார் என 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் ரயில் பெட்டி தயாரிக்கும் (ஐ.சி.எஃப்) நிறுவனத்தில் ஜானகிராமன் வேலை செய்து வந்தார். மத்திய அரசின் ரயில்வே ஊழியரான ஜானகிராமன், சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும் ஐ.சி.எஃப். கூட்டுறவுச் சங்க இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.

ஜானகிராமன்
ஜானகிராமன்
`தீபாவளி பட்டாசால் அலறல் சத்தம் கேட்கல' - நண்பனை விரட்டிவிட்டு ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் கொலை

தீபாவளியைக் குடும்பத்தினருடன் சந்தோஷமாகக் கொண்டாடிய ஜானகிராமன், நண்பர்களைச் சந்திக்க மாலையில் வீட்டிலிருந்து பைக்கில் சென்றார். பின்னர் இரவு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 31-வது தெருவழியாக பைக்கில் ஜானகிராமன் வந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து பெரவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``வில்லிவாக்கம் பகுதியில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் ஜானகிராமன் நிர்வாகியாக இருந்தார். அந்தக் கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் (25). இவருக்கும் ஜானகிராமனுக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. தீபாவளி தினத்தன்று பைக்கில் வந்த ஜானகிராமனை பூசாரி ஓம்பிரகாஷ், ஸ்கெட்ச் போட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

விஜய்
விஜய்

ஜானகிராமனைக் கொலை செய்த வழக்கில் ஓம்பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அனிஷ் (25), குமரன் (25), சரபோஜி (22), ரவிபிரசாத் (22), சரத்குமார் (25), விஜய் (25) ஆகியோரை கைது செய்துள்ளோம். இந்தக் கொலையைத் துப்பு துலங்கியதற்கு அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளும் செல்போன் சிக்னலும்தான் உதவியாக இருந்தன. கோயில் பூசாரி ஓம்பிரகாஷிடம் விசாரித்தபோது அவர் கொலைக்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

எங்களிடம் பூசாரி ஓம்பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தில், ‘இளங்காளியம்மன் கோயிலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைமுறை தலைமுறையாக பூசாரியாக இருந்துவருகிறோம். என்னுடைய அப்பா சீனிவாசனுக்குப் பிறகு நான் இந்தக் கோயிலில் பூசாரியாக இருந்தேன். இந்தச் சமயத்தில் ஜானகிராமனுக்கும் எனக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது.

குமரன்
குமரன்

நான் கோயிலுக்குள் கஞ்சா போதையில் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் இந்து அறநிலையத்துறைக்கு ஜானகிராமன் புகார் கொடுத்தார். இதனால் இந்து அறநிலையத்துறையிலிருந்து என்னை வேலையை விட்டு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். என்னுடைய அரசு வேலை பறிபோனதற்கு ஜானகிராமன்தான் காரணம் எனக் கருதினேன். இதனால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தேன்.

இதற்காக என்னுடைய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினேன். தீபாவளி தினத்தன்று ஜானகிராமனைக் கொலை செய்ய திட்டமிட்டோம். அவரை நோட்டமிட ஜானகிராமனின் வீட்டுக்கு ஒருவரை அனுப்பினோம். அவர்தான் வீட்டிலிருந்து ஜானகிராமன் வெளியில் செல்வதை எங்களுக்குத் தெரிவித்தார். பிறகு ஜானகிராமனைப் பின்தொடர்ந்தோம். அப்போது ஆள்நடமாட்டம் இருந்ததால் அவரை விட்டுவிட்டோம்.

சரபோஜி
சரபோஜி

பிறகு நண்பர்களுடன் ஜானகிராமன் பேசிக் கொண்டிருந்தார். அதுவரை அந்தப்பகுதியில் காத்திருந்தோம். ஒருவேளை எங்களிடம் இருந்து ஜானகிராமன் தப்பித்துவிட்டால் அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மறித்து அவரைக் கொலை செய்ய கொளத்தூர் 31-வது தெருவில் 3 பேர் காத்திருந்தார்கள்.

ஜானகிராமன் பைக்கில் வீட்டுக்குப் புறப்பட்டபோது 3 பேர் அவரை பைக்கில் பின்தொடர்ந்து சென்றோம். அப்போது மழை பெய்ததால் தெருவில் ஆள்நடமாட்டம் இல்லை. மேலும் பட்டாசு சத்தம் அதிகமாக கேட்டது. ஜி.கே.எம். காலனி, கொளத்தூர் 31-வது தெருவுக்குள் அவர் சென்றபோது பைக்கில் மோதினோம்.

அனிஷ்
அனிஷ்

அப்போது, அங்கு மறைந்திருந்த 3 பேர் வந்து அரிவாளால் வெட்டினார்கள். பின்னர், சுடுகாடு பகுதியில் தலைமறைவாக இருந்து மதுஅருந்திக் கொண்டிருந்த எங்களைப போலீஸார் பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க பிரமுகரான ஐ.சி.எப் ஊழியர் ஜானகிராமனைக் கொலை செய்த ஓம்பிரகாஷ், தன்னுடைய கூட்டாளிகளுக்கு மதுவும் பிரியாணியும் மட்டுமே வாங்கிக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.