சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், பள்ளிக்கூடம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (27). இவரின் மனைவி கவிதா (26). இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். பால்ராஜ், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தனியார் கம்பெனியில் பெயின்ட்டராக பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கால் அவருக்கு வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே இருந்திருக்கிறார். வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்தச் சிரமப்பட்டிருக்கிறார். அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட கவிதா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். தனிமையிலிருந்த பால்ராஜ், மனவேதனையடைந்திருக்கிறார். அதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று, அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
ஐடி பெண் ஊழியர்
பட்டாபிராம், தேவராஜபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனவள்ளி (46). இவரின் மகள் சஞ்சனா (24). இவர் அம்பத்தூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றியிருக்கிறார். வேலைப்பளு காரணமாக மன உளைச்சலில் இருந்த சஞ்சனா, கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் ஆசிட்டை சில தினங்களுக்கு முன்னர் குடித்தார்.
அதனால் மயங்கி விழுந்த அவரை வீட்டிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சஞ்சனாவுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து பட்டாபிராம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
பட்டாபிராம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.