Published:Updated:

சென்னை: எச்சரிக்கையை மீறிக் கடலில் அலைச்சறுக்கு! - மகளைக் காப்பாற்றச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்

கடல் அலையில் மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை
கடல் அலையில் மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை

சென்னை திருவான்மியூரில் கடல் அலையில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் தந்தை, மகள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத அலையில் மகள் சிக்கியதும், அவளைக் காப்பாற்ற தந்தை முயன்றார். இதில் தந்தை உயிரிழந்தார்.

தமிழகத்துக்கு அடுத்தடுத்து வந்த புயல்களால் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்தச் சூழலில் திருவான்மியூர் கடற்கரைக்கு இன்று காலை தந்தையும் மகளும் கடல் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த மீனவர்கள், `கடலில் ராட்சத அலை வருகிறது. அதனால் பயிற்சியில் ஈடுபட வேண்டாம்' என எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் அதைக் கேட்காமல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

சிறுமி
சிறுமி

அப்போது ராட்சத அலை ஒன்றில் மகள் சிக்கினார். அதைப் பார்த்த தந்தை அவளைக் காப்பாற்ற முயன்றார். இந்தக் காட்சிகளைப் பார்த்த மீனவர்கள் இருவரையும் காப்பாற்ற கடலுக்குள் சென்றனர். அப்போது மகளை உயிரோடு மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தந்தையை மீனவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் சோகத்தோடு அந்தச் சிறுமி காத்திருந்தார். இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் மற்றும் போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவான்மியூர் கடற்கரையில் சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது சிறுமியின் தந்தை எனத் தெரியவந்தது. தந்தையைப் பார்த்த சிறுமி கதறி அழுதார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக தந்தையின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டது. பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர்.

கடல் அலையில் சிக்கி பலியான மில் தொழிலாளிகள்... திதி கொடுக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!
சிறுமியிடம் விசாரிக்கும் போலீஸ்
சிறுமியிடம் விசாரிக்கும் போலீஸ்

விசாரணையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவரின் பெயர் பாலாஜி (55) என்றும், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. பாலாஜி, ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவரின் ஒரே மகள், தி.நகரிலுள்ள பள்ளியில் படித்து்வருகிறார். பாலாஜியும் அவரது மகளும் கடல் அலையில் சறுக்கு விளையாட்டில் நல்ல பயிற்சி பெற்றவர்கள். அதனால், அடிக்கடி இந்தப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டபோது மகளைக் காப்பாற்ற சென்ற பாலாஜி உயிரிழந்தது தெரியவந்தது.

அடுத்த கட்டுரைக்கு