Published:Updated:

32 பெண்களை வீழ்த்திய சையத்! - மூவர் விரித்த வலையில் சிக்கியது எப்படி?

முகமது சையத்
பிரீமியம் ஸ்டோரி
முகமது சையத்

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து துணை நடிகை புகார் அளித்தார். அவருடன் மற்ற இரு காதலிகளும் சையத் குறித்த ஆதாரங்களை போலீஸிடம் அளித்தனர்.

32 பெண்களை வீழ்த்திய சையத்! - மூவர் விரித்த வலையில் சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து துணை நடிகை புகார் அளித்தார். அவருடன் மற்ற இரு காதலிகளும் சையத் குறித்த ஆதாரங்களை போலீஸிடம் அளித்தனர்.

Published:Updated:
முகமது சையத்
பிரீமியம் ஸ்டோரி
முகமது சையத்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் `The Tinder Swindler’ என்றொரு டாக்குமென்டரி வகையிலான படம் ஒன்று உண்டு. ‘டிண்டர்’ என்ற டேட்டிங் ஆப்பில் இளம்பெண்களிடம் அறிமுகமாகும் இஸ்ரேலைச் சேர்ந்த சைமன் லிவைவ், தன்னை வைர வியாபாரியின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, லட்சக்கணக்கான பணத்தைக் கறந்துவிடுவான். அதைவைத்துப் பிற பெண்களுடன் உல்லாசமாக இருப்பான். இவனைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மீடியாவுக்குத் தெரியப்படுத்த, அதை ஒரு நிறுவனம் டாக்குமென்டரியாகவும் பதிவுசெய்தது. கிட்டத்தட்ட சைமனைப்போலவே சென்னையிலும் பெண்களை ஏமாற்றி முகமது சையத் என்பவன் பிடிபட்டிருக்கிறான். அவனுக்கு டிண்டர் என்றால், இவனுக்கு இன்ஸ்டாகிராம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயதான முகமது சையத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. இன்ஸ்டாகிராமில் சிக்ஸ்பேக் புகைப்படங்களோடு தன்னை நடிகனாக, மாடலாகக் காட்டிக்கொண்டு சுமார் 32 பெண்களை ஏமாற்றியிருக்கிறான். அவர்களில் ஒரு பெண் துணிந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கவே, தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான் சையத்.

விலையுயர்ந்த செல்போன், கார், ஹாலிவுட் நடிகரைப்போல டிரெஸ், தினமும் பப், ஸ்டார் ஹோட்டல்களுக்கு விசிட் என பந்தாவாக வாழ்ந்துவந்த சையத், சில வாரங்களுக்கு முன்பு தன் காதலியான துணை நடிகையை தி.நகரிலிருக்கும் ஒரு பப்புக்கு வரும்படி மெசேஜ் அனுப்பியிருக்கிறான். போதையில் அதே மெசேஜை வேறு இரண்டு காதலிகளுக்கும் அனுப்பியிருக்கிறான். அதைப் பார்த்த மூவருமே அந்த பப்புக்கு வந்து தனித்தனியே காத்திருந்தனர்.

32 பெண்களை வீழ்த்திய சையத்! - மூவர் விரித்த வலையில் சிக்கியது எப்படி?

காரில் வந்திறங்கிய முகமது சையத், துணை நடிகையை அழைத்துக்கொண்டு பப்புக்குள் சென்றுவிட்டான். கார் பார்க்கிங் முன்பு தனித்தனியே காத்திருந்த மற்ற இரண்டு காதலிகளும் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர். தொடர்ந்து இருவரும் ‘நீயும் அவனுக்குத்தான் காத்திருந்தாயா?’ என்று பரஸ்பரம் விசாரித்து மேலும் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் உள்ளே சென்று நைசாக துணை நடிகையை ரெஸ்ட் ரூமுக்கு தனியே அழைத்து தகவலைச் சொல்ல... ஆரம்பத்தில் அவர் நம்பவில்லை. இதையடுத்து, இருவரும், ‘நீ நம்பவில்லையென்றால் அவனது செல்போனை சோதித்துப் பார்... எங்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்ட துணை நடிகை, சையதுக்கு மட்டும் மது கொடுத்துவிட்டு, தான் மது அருந்தாமல் தவிர்த்துவிட்டார். ஒருகட்டத்தில் சையதுக்கு முழு போதை ஏறியவுடன், அவனது செல்போனை எடுத்துச் சோதித்திருக்கிறார். அதில் மேற்கண்ட இரு காதலிகள் மட்டுமல்ல... மொத்தம் 32 பெண்களுடன் சையத் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார் அந்தத் துணை நடிகை!

இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து துணை நடிகை புகார் அளித்தார். அவருடன் மற்ற இரு காதலிகளும் சையத் குறித்த ஆதாரங்களை போலீஸிடம் அளித்தனர். தொடர்ந்து, போலீஸ் சையத்திடம் விசாரித்தபோது, “நான் செய்ததில் என்ன தவறு? நான் யாரையும் கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை” என்று கூலாகக் கூறியுள்ளான். அதைக் கேட்ட போலீஸார், “பெண்கள் புகார் கொடுக்காத வரைதான் இந்த ஜம்பமெல்லாம் செல்லுபடியாகும். நீ பெண்களை மிரட்டி பணம், விலையுயர்ந்த பொருள்களை வாங்கியிருக்கிறாய் என்று புகார் வந்துள்ளது” என்று கூறி வழக்கு பதிவுசெய்து, சிறையில் அடைத்தனர்.

சையத்தை விசாரித்த வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸாரிடம் பேசினோம். ``சையத், பெண்களைப் பேசியே மனதைக் கரைப்பதில் கில்லாடி. ‘ஹேய்... நீ நடிகை தமன்னா மாதிரி இருக்கே... நயன்தாரா எல்லாம் உன் அழகுக்கு முன்னாடி எம்மாத்திரம்... உன்னை மாடலிங்கில் பெரிய ஆளாக்குறேன்’ என்று சொல்லியே மயக்கியிருக்கிறான். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, மலையாளம் என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசியதாலும் அவனது வலையில் பலரும் வீழ்ந்துள்ளனர். இவர்களை பப்களுக்கு அழைத்துச் சென்று ஜாலியாகப் பொழுதைக் கழித்தவன், சிலரை ஹூக்கா போதைக்கும் பழக்கப்படுத்தியிருக்கிறான்.

32 பெண்களை வீழ்த்திய சையத்! - மூவர் விரித்த வலையில் சிக்கியது எப்படி?

சென்னையில் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றினாலும், சையத்தின் குடும்பம் வசதியானது. ஒரு பெண்ணை தனது வலையில் வீழ்த்த ஆரம்பத்தில் அவருக்கு தாராளமாக செலவழிப்பான். புதிதாக இன்னொரு பெண் சிக்கியதும், முன்னாள் காதலியை மிரட்டி பணத்தைப் பறித்து, புதிய காதலிக்குச் செலவழிப்பான். அதிகபட்சம் இவன் ஒரு பெண்ணுடன் ஒரு மாதம் மட்டுமே தொடர்பில் இருப்பான். இவனிடம் இன்னொரு வித்தியாசமான பழக்கம் இருந்துள்ளது. பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவன் வளர்க்கும் பூனையிடம் தினமும் காட்டுவானாம்...” என்று சொல்லி கிறுகிறுக்கவைத்தார்கள்!

இந்த வழக்கை விசாரித்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``சையத்தின் செல்போனை ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் ஒரு ஆப் மூலம் சொற்ப நாள்களிலேயே அவன் ஏராளமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், அவர்களைப் பற்றிய ரகசியம் காக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என்றார்.

முன்பு காசி... இப்போது சையத். பெண்கள் துணிந்து புகார் கொடுக்காதவரை இவனைப் போன்றவர்கள் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்... சட்டத்தின் ஓட்டைகளில் இவர்கள் தப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது காவல்துறையின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism