Published:Updated:

`குடிக்காததால் தூக்கமில்லாமல் சோர்வாக இருந்தார்' - விபரீத முடிவெடுத்த சென்னை தொழிலாளி

வீரபத்திரன்
வீரபத்திரன்

144 தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனால் குடிக்க முடியாத விரக்தியில் சென்னை திருவொற்றியூரில் கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ரயில், பஸ் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். ஆனால், 144 தடை உத்தரவை மீறி சிலர் வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு வாகனச் சோதனைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் போலீஸ்
பாதுகாப்பு பணியில் போலீஸ்

தேவையில்லாமல் வெளியில் வாகனங்களைச் சுற்றி போலீஸாரிடம் சிக்குபவர்களுக்கு நூதன தண்டனைகளை தமிழக போலீஸார் வழங்கிவருகின்றனர். சென்னை பூந்தமல்லியில் சிக்கியவர்களை தவளைபோல குதிக்க வைத்தனர். செங்குன்றம் பகுதியில் சிக்கியவர்களை போலீஸார், கொரோனா விழிப்புணர்வுப் பதாகைகளைப் பிடிக்க வைத்து இடைவெளி விட்டு அமர வைத்திருந்தனர். குமணஞ்சாவடியில் சிக்கியவர்களுக்கு ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. போலீஸார் நிர்ணயித்த எல்லையைத் தொட்டுவிட்டு வந்தவர்களுக்கு வாகனங்களின் சாவி கொடுக்கப்பட்டது. 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுவுக்கு அடிமையானவர்கள், தற்போது சிரமப்பட்டுவருகின்றனர். கேரளாவில் மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். மது கிடைக்காததால் ஏற்படும் தற்கொலையைத் தடுக்க அந்த மாநில முதல்வர், டாக்டர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கப்படும் என்று கூறினார். இந்தச் சூழலில் கேரளாவைப் போல சென்னை திருவொற்றியூரிலும் மது கிடைக்காத விரக்தியில் கூலித் தொழிலாளி வீரபத்திரன் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`பாதிப்பை சரி செய்யவும், தற்கொலைகளை தடுக்கவும் மட்டுமே.!’ -குறைந்த அளவில் மது விற்பனை செய்யும் கேரளா

திருவொற்றியூர் விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (37). இவர், சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா வீட்டு வேலை செய்து வருகிறார். வீரபத்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. 144 தடை உத்தரவால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த சில நாள்களாக மது குடிக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த வீரபத்திரன், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் சடலம், ஸ்டான்லி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

திருவொற்றியூர் உதவி கமிஷனர் அலுவலகம்
திருவொற்றியூர் உதவி கமிஷனர் அலுவலகம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``144 தடை உத்தரவு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் வீரபத்திரன் சில தினங்களாக விரக்தியில் இருந்துவந்துள்ளார். மது குடிக்க முடியவில்லை என்று வீட்டில் புலம்பிவந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட வீரபத்திரனுக்கு உஷா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்" என்றனர்.

வீரபத்திரனின் மனைவி உஷா அளித்த புகாரில், ``ஊரடங்கு உத்தரவு காரணமாக நானும் என் கணவர் வீரபத்திரனும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தோம். குடும்பச் செலவுக்குகூட பணமில்லாத சூழலில் வீரபத்திரன் 30-ம் தேதி இரவு குடிக்க என்னிடம் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்கவில்லை. கடந்த சில தினங்களாக குடும்பச் சூழ்நிலை மற்றும் குடிக்காததால் தூக்கமில்லாமல் வீரபத்திரன் சோர்வாக இருந்தார். 31-ம் தேதி வீட்டைவிட்டு காலை 7 மணிக்குச் சென்றார்.

பிணவறை
பிணவறை

அன்றைய தினம் காலை 9 மணியளவில் கழுத்தை அறுத்துக் கொண்டு வீரபத்திரன் மேம்பாலத்திலிருந்து குதித்துவிட்டதாக திருவொற்றியூர் போலீஸார் கூறினர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். என் கணவரின் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மது கிடைக்காத விரக்தியில் தொழிலாளி வீரபத்திரன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு