Election bannerElection banner
Published:Updated:

சென்னை: இறப்பதற்கு முன் வீடியோ அனுப்பிய பட்டதாரிப் பெண்! - திருமணமான 5 மாதங்களுக்குள் சோகம்

 பட்டதாரிப் பெண்  தற்கொலை
பட்டதாரிப் பெண் தற்கொலை ( Representational Image )

திருமணமான ஐந்து மாதங்களுக்குள் வரதட்சணைக் கொடுமையால் பட்டதாரிப் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

சென்னை கே.கே.நகர் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் உமா. இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என் கணவர் தேஜாரெட்டி, கார் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். என் இளைய மகள் ஜோதி ஸ்ரீ, கே.கே.நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். புரோக்கர் மூலம் 2020-ம் ஆண்டு ஜோதி ஸ்ரீக்கு வரன் வந்தது. அதனால் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருமுல்லைவாயல் வாஞ்சிநாதன் தெரு, அன்னை சத்யா நகரில் வசிக்கும் டில்லிபாபு, அம்சா ஆகியோரின் மகன் பாலமுருகனுக்கு 25.11.2020-ல் திருமணம் செய்துவைத்தோம்.

திருமணம்
திருமணம்
representational image

திருமணத்தின்போது என் மகளுக்கு தாலி செயின் நெக்லஸ் உட்பட 8 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு மோதிரமும் வரதட்சணையாகக் கொடுத்தோம். எனது மகள் திருமணமான பிறகு 15 நாள்கள் சந்தோஷமாக இருந்தாள். அதன் பிறகு கணவன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் ஜனவரி மாதம் 12-ம் தேதி ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அப்போது போலீஸார் என் மருமகனை அழைத்து விசாரித்தனர். பின்னர் என் மகளுக்கும் மருமகனுக்கும் கவுன்சலிங் அளித்தனர். அதன் பிறகு என் மகளிடம் மாமியார், கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறோம் என்று கூறி, அதனால் கடனை அடைக்க பணம் வாங்கி வரும்படி கூறியிருக்கிறார்.

மேலும் தாலி செயினை அடகு வைத்து பணம் கொடு என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அப்போது மகளின் மாமியார் விசாரணைக்கு வரவில்லை. மருமகன் மட்டும் விசாரணைக்கு வந்தார். விசாரணையில் தனிக்குடித்தனம் செல்வதாக போலீஸாரிடம் மருமகன் கூறினார். இதையடுத்து எனது மகள் கே.கே.நகரில் தங்கியிருந்தார். 3.4.2021-ல் தன் கணவர் தன்னை அழைப்பதாக என்னிடம் கூறிவிட்டு காலை 7:30 மணியளவில் திருமுல்லைவாயலுக்கு என் மகள் சென்றாள். வீட்டுக்குச் சென்ற மகளை அவள் கணவர் பாலமுருகனும் மாமியார் அம்சாவும் சேர்ந்து அவளை வீட்டுக்குள் செல்லவிடாமல் அடித்திருக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை
சென்னை: விபத்தில் காதலன் மரணம்; 10-வது நாள் தற்கொலை செய்துகொண்ட காதலி!

அப்போது அவளின் கணவர் உன்னுடன் வாழ எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு என் மகள், கணவரிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் என் மருமகன் ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து என் மகள் பிடிவாதமாக நான் உன்னுடன்தான் வாழ்வேன் என்று கூறி வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது அவளின் மாமியார் வீட்டின் மின்இணைப்பைத் துண்டித்திருக்கிறார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் முதல் மாடியிலுள்ள படுக்கை அறையில் இருக்கும் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்தத் தகவலை போலீஸார் எனக்கு இரவு 9 மணியளவில் போனில் கூறினார்கள். உடனே நான் வந்து பார்த்தபோது என் மகள் இறந்தநிலையில் இருந்தார். என் மகள் என்னுடைய போனுக்கு அவளின் இறப்புக்குக் காரணம் தன் கணவர், மாமியார்தான் என்று வீடியோவில் பேசி அனுப்பியிருக்கிறார். எனவே, என் மகளைக் கொடுமை செய்து அவளின் இறப்புக்கு காரணமான அவளின் கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். திருமணமான ஐந்து மாதங்களுக்குள் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு