Published:Updated:

``மாஸ்டர் பிளான்; கணவரை ஏமாற்ற டெலிவரி சார்ட்!" - குழந்தையைக் கடத்தி மருத்துவமனையிலே தங்கிய ரேவதி

ரேவதி
ரேவதி

``அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக என் கணவரை நம்பவைத்தேன். போலீஸிடம் சிக்காமலிருக்க, டெலிவரி சார்ட்டையும் நானே ரெடி பண்ணி வைத்திருந்தேன்" என்று நர்ஸிங் படித்த ரேவதி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம், ஏகாதி பாரதி காலனியைச் சேர்ந்தவர், ஜான்போஸ்லே. இவரின் மனைவி ரந்தீஷா. இந்தத் தம்பதிக்கு ஜான் என்கிற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தோடு சென்னை மெரினா கண்ணகி சிலை அருகில் தங்கியிருக்கும் ஜான்போஸ்லே, பலூன்களை விற்று பிழைப்பு நடத்திவருகிறார். கடந்த 12-ம் தேதி, 7 மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரேவதி (27), அவருக்கு உதவிய ரேவதியின் அம்மா ஜெயலட்சமி ஆகியோரை பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் ராய் தலைமையிலான போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சிசிடிவியில் சிக்கிய ரேவதி
சிசிடிவியில் சிக்கிய ரேவதி

பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் லட்சுமணன் மற்றும் போலீஸார், குழந்தை ஜானை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சட்டப்படி ஜான்போஸ்லே - ரந்தீஷா தம்பதியிடம் ஒப்படைத்தனர். அப்போது அந்தத் தம்பதி, குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுத்த சென்னை போலீஸாருக்கு அன்பளிப்பாக பாசிமாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தனர். அதை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். 8 நாள்களுக்குப் பிறகு குழந்தையைக் கண்ட ரந்தீஷா, ஜானை அன்போடு தூக்கி உச்சிமுகர்ந்தார். அதைப்பார்த்த போலீஸாரும் அங்கிருந்தவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

7 மாத குழந்தை ஜானைக் கடத்திய வழக்கில் கைதான ரேவதி போலீஸாரிடம், `நான் சைதாப்பேட்டையில் பி.எஸ்ஸி நர்ஸிங் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் எனக்கு திருமணம் நடந்தது. அதனால் நர்ஸிங் படிப்பை முடிக்கவில்லை. எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகும் அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்தன. அதனால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை எனக்கும் என் கணவர் வீட்டினருக்கும் இருந்தது. அதனால் மீண்டும் அறுவைசிகிச்சை செய்தேன். அதன்பிறகு கர்ப்பம் அடைந்தேன். அப்போதுகூட என் கணவர் வீட்டினர் இதுவும் பெண் குழந்தைதான் என்று கருதினர்.

ரேவதியின் அம்மா ஜெயலட்சுமி
ரேவதியின் அம்மா ஜெயலட்சுமி

கர்ப்பமான பிறகு சென்னையில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்தேன். அப்போது, நானும் அம்மாவும் இதுவும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தோம். அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா வந்தது. இந்தக் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு விலைக்கு ஆண் குழந்தை வாங்கலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி, அந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேன். ஆனால், அந்தத் தகவலை என் கணவர் வீட்டினருக்குத் தெரிவிக்கவில்லை. கர்ப்பிணி போல வயிற்றில் சேலைகளை வைத்து நாடகமாடினேன். அதை என் கணவர் வீட்டினரும் நம்பினார்கள்.

அம்மா வீட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். அப்பா வாட்ச்மேன் வேலைக்குச் செல்வார். நானும் என் முதல் குழந்தையும் மட்டுமே வீட்டில் தனியாக இருப்போம். அதனால் மெரினா கடற்கரைக்குச் செல்வேன். மேலும், எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் ஆண் குழந்தையை விலைக்கு வாங்க முயற்சி செய்துவந்தேன். இந்தச் சமயத்தில்தான், மெரினா கடற்கரையில் பலூன் விற்கும் இந்தத் தம்பதியின் ஆண் குழந்தை என் கண்ணில் பட்டது. அந்தத் தம்பதிக்கு இந்தி மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அதனால், இந்தக் குழந்தையைக் கடத்தி வளர்க்கலாம் எனத் திட்டம் போட்டேன். அதற்காகத்தான் சினிமாவில் நடிக்க வைப்பதாக அந்தத் தம்பதியிடம் ஆசைவார்த்தை கூறினேன்.

குழந்தை கடத்தலைக் கண்டுபிடித்த போலீஸ் டீம்
குழந்தை கடத்தலைக் கண்டுபிடித்த போலீஸ் டீம்

சம்பவத்தன்று காலை, மெரினா கடற்கரைக்குச் சென்றேன். அங்கு ரந்தீஷா, குழந்தை ஜான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பாரிமுனைக்குச் சென்றேன். அங்கு குழந்தைக்கு டிரெஸ், பவுடர், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தேன். பின்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு அவர்களை அழைத்துவந்தேன். அங்கேயும் ஷாப்பிங் செய்தோம். பின்னர், அண்ணா சாலையில் உள்ள அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு குழந்தையைக் கேட்டபோது ரந்தீஷா கொடுக்கவில்லை. அதனால் அந்த மருத்துவமனையில் குழந்தையை என்னால் கடத்த முடியவில்லை.

இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றோம். அங்குதான் ரந்தீஷாவை ஏமாற்றிவிட்டு குழந்தையோடு தப்பிச்சென்றேன். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்த நான், அம்மா ஜெயலட்சுமிக்கு போனில் தகவல் தெரிவித்தேன். உடனடியாக அவரும் அங்கு வந்தார். தாய்ப்பால் மட்டுமே குடித்துவந்த குழந்தை ஜான், பாலை பாட்டிலில் குடிக்காமல் அடம்பிடித்தான். அதனால் குழந்தைக்கு வாந்திபேதி என உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலேயே நானும் அம்மாவும் குழந்தையோடு தங்கினோம். ஆனால், மருத்துவமனையில் எங்களை உள்நோயாளியாக சேர்க்கவில்லை. புறநோயாளியாக சிகிச்சை அளித்தனர். குழந்தையின் பெயரை மாற்றி சாம் என்று மருத்துவமனையில் கூறினேன்.

போலீஸ் கமிஷனருக்கு பரிசுடன் காத்திருக்கும் ரந்தீஷா அவரின் கணவர்
போலீஸ் கமிஷனருக்கு பரிசுடன் காத்திருக்கும் ரந்தீஷா அவரின் கணவர்

குழந்தையை போலீஸார் தேடுவதாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்தேன். அதனால் வீட்டுக்குக்கூட செல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்தேன். இதற்கிடையில், ஆண் குழந்தை பிறந்திருப்பதாக என் கணவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்களும் ஆசையாக மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்தனர். அப்போது என் கணவர், குழந்தை பெரியதாக இருக்கிறது. மேலும் முகசாடையும் வேறுவிதமாக உள்ளது என்று சில கேள்விகளை என்னிடம் கேட்டார். அதற்கு நான், மூன்றரை கிலோ எடையில் குழந்தை பிறந்ததால் பெரிய பிள்ளையாக இருக்கிறது என்று கூறி சமாளித்தேன். பின்னர், என் கணவர் மருத்துவமனையிலிருந்து அரக்கோணத்துக்குச் சென்றுவிட்டார்.

நான் மருத்துவமனையிலேயே குழந்தையோடு சுற்றித் திரிந்ததால், என்மீது அங்குள்ள ஒரு நர்ஸுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் சமாளித்தேன். மருத்துவமனைக்கு வந்த போலீஸார் முதலில் என்னிடம் விசாரித்தனர். நான், பி.எஸ்ஸி நர்ஸிங் படித்திருந்ததால், போலியாக டெலிவரி சார்ட்டை தயாரித்து வைத்திருந்தேன். அதைக் காண்பித்து தப்பிக்க முயன்றேன். ஆனால், அந்த சார்ட் போலி என்பதை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். மேலும், குழந்தையின் அம்மா, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வித்யா ஆகியோர் இந்தியில் பேசியபோது என் மடியில் படுத்திருந்த குழந்தை அவர்களை எட்டிப்பார்த்தான். அதோடு, ரந்தீஷாவைப் பார்த்ததும் அவரிடம் குழந்தை சென்றுவிட்டான். மேலும் ரந்தீஷா, நான் குழந்தையைக் கடத்தியதை போலீஸாரிடம் இந்தியில் கூறினார். உடனடியாக என்னையும் அம்மா ஜெயலட்சுமியையும் போலீஸார் பிடித்துவிட்டனர்' என்று கூறியுள்ளார்.

குழந்தையைக் கடத்திச் செல்லும் ரேவதி
குழந்தையைக் கடத்திச் செல்லும் ரேவதி

குழந்தையைப் பறிகொடுத்த தம்பதிக்கு ஜான்தான் முதல் குழந்தை. பிழைப்புக்காக சென்னை வந்த அந்தத் தம்பதி, குழந்தையைப் பறிக்கொடுத்த நாளிலிருந்து சாப்பிடாமல், தூங்காமல் கவலையோடு கண்ணகி சிலை அருகிலேயே தங்கியிருந்துள்ளனர். அவ்வப்போது பூக்கடை காவல் நிலையத்துக்கு வந்து, குழந்தை குறித்த தகவல்களை விசாரித்துவந்துள்ளனர். குழந்தை கிடைத்த தகவலை போலீஸார் அந்தத் தம்பதியிடம் கூறியபோது, பிளாட்பாரத்தில் குடியிருக்கும் எங்கள் குழந்தையைக் கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தையில்லை என்று கண்ணீர்மல்க கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். பின்னர், ரந்தீஷாவை போலீஸார் அழைத்துச் சென்று மருத்துவமனையில் குழந்தையைக் காண்பித்தபோது, ரந்தீஷா இந்தியில் ஜானிடம் பேசினார். பின்னர், ஜானை மடியில் வைத்துக் கொஞ்சியதோடு பாலும் ஊட்டினார். தற்போது, வயிற்றுப்பிழைப்புக்காக குழந்தையோடு மீண்டும் மெரினா கண்ணகி சிலை அருகில் பலூன்களை விற்றுக்கொண்டிருக்கிறது அந்தத் தம்பதி

அடுத்த கட்டுரைக்கு